Last Updated : 13 Feb, 2015 11:40 AM

 

Published : 13 Feb 2015 11:40 AM
Last Updated : 13 Feb 2015 11:40 AM

ஜெயலலிதா வழக்கில் நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல் ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அடிப்படையாக வைத்து வாதிட உத்தரவு: சுதாகரன் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல் சரியான ஆதாரங்களையும், முறையான அரசு தரப்பு சாட்சியங்களையும் அடிப்படையாக வைத்து வாதிடுமாறு சுதாகாரன், இளவரசி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சுதாகரன், இளவரசி ஆகியோரின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மூத்த வழக்கறிஞருமான சுதந்திரம், அசோகன் ஆகியோர் ஆஜராகினர்.

இதையடுத்து 2-வது நாளாக வழக்கறிஞர் சுதந்திரம் வாதிட்டதாவது:

1991-96 காலக்கட்டத்தில் சுதாகரனும், இளவரசியும் சூப்பர் டூப்பர் டிவி, ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் உள்ளிட்ட 7 தனியார் நிறுவனங்களில் நிர்வாக இயக்குநர்களாக இருந்தனர். அப்போது ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரே ஒரு பைசா கூட சுதாகரனின் வங்கிக் கணக்குக்கு வரவில்லை.

இதே போல அவர் நிர்வகித்த தனியார் நிறுவனங்களுக்கும் வரவில்லை. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து சுதாகரனுக்கும், அவரது நிறுவனத்துக்கும் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அதனை உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கவில்லை.

இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ள இந்தியன் வங்கி மேலாளர் அருணாசலம் (அரசு தரப்பு சாட்சி) பணப்பரிவர்த்தனை நடைபெற்றதை உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. நால்வரும் கூட்டுசதியில் ஈடுபட்டதாகவும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜெயலலிதாவை குற்றம் செய்ய தூண்டியதாகவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத ஜெயலிதாவுக்கு அடிப்படை ஆதாரமில்லாமல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2 மணிநேரம் சரமாரி கேள்வி

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகளை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வழக்கு பதிவு செய்தது. பரிவர்த்தனை நடந்தது, கூட்டுசதியில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் எங்கு தவறு நடந்துள்ளது? தீர்ப்பில் உள்ள குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபியுங்கள்.

குற்றவியல் வழக்குகளில் எவ்வாறு வாதிட வேண்டும் என உங்களுக்கு தெரியுமா? நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல் சரியான ஆதாரங்களையும், முறையான அரசு சாட்சியங்களையும் அடிப்படையாக வைத்து வாதிடுங்கள். 18 ஆண்டுகள் எந்த‌ ஆதாரமும் இல்லாமல் வழக்கு எப்படி நடந்தது?

சுதாகரன், இளவரசியின் வழ‌க்கறிஞரான நீங்கள் அவர்களுக்காக வாதிடாமல், எதற்காக ஜெயலலிதாவைப் பற்றி பேசுகிறீர்கள்? சுதாகரன், இளவரசியின் தொழில் என்ன? மொத்த‌ வருமானம் எவ்வளவு? சொத்துக்களின் விபரம் என்ன என்பதை தாக்கல் செய்யுங்கள். அதன்பிறகு தனியார் நிறுவனங்களின் சொத்துப்பட்டியல் குறித்து வாதிடுங்கள்” என்றார்.

இதற்கு பதிலளிக்க முடியாமல் வ‌ழக்கறிஞர் சுதந்திரம் திணறினார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் பி.குமார், மணிசங்கர், செந்தில் ஆகியோர் அவருக்கு உதவினர். இதையடுத்து சுதந்திரம், “பேரறிஞர் அண்ணா, ‘சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம்தான் வெளிச்சம்’ என கூறியுள்ளார். அதனால் இது தொடர்பாக தக்க ஆதாரங்களுடன் வாதிடுகிறேன்” என்றார். ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வழக்கறிஞர் சுதந்திரம் வாதிடவில்லை.

30 சதவீதம் கூட நிரூபிக்கவில்லை

இதையடுத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் பேசும்போது, “ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடங்களையும், சுதாகரனின் திருமண செலவையும் மதிப்பீடு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது. ரூ 3.62 கோடி மதிப்புள்ள கட்டிடங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை 13.65 கோடி என மிகைப்படுத்திக் கட்டியுள்ளது. இதேபோல தங்கம், வெள்ளி, வைர நகைகள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.

சுதாகரன் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தாய் மாமன் என்ற முறையில் ராம்குமார் சிவாஜி கணேசன் ரூ.1 கோடி செலவு செய்தார். திருமணத்துக்கு வந்தவர்களை வரவேற்க மட்டுமே ஜெயலலிதா ரூ.29 லட்சம் செலவு செய்தார். ஆனால் ஜெயலலிதா ரூ.6.45 கோடி செலவு செய்ததாக மிகைப்படுத்தி கணக்கு காட்டப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இவ்வழக்கின் விசாரணை ஆரம்பித்ததில் இருந்து கட்டிடங்கள், நகைகள், செலவுகள் மிகைப்படுத்தப்பட்டதாக வாதிடுகிறீர்கள். ஆனால் உங்களது தரப்பில் 30 சதவீத ஆதாரத்தைக் கூட சமர்ப்பிக்காதது ஏன்?” என்றார். இதையடுத்து வழக்கு வெள்ளிக்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைக்கப்பட்டது.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x