

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி, காங்கிரஸ் வேட் பாளரான கிரண்வாலியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
புதுடெல்லி தொகுதியில் கேஜ்ரிவாலை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் கிரண்வாலியா. இம் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான கிரண், டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு மனு அளித்திருந்தார்.
அதில், ‘உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்வாசியான அர்விந்த் கேஜ்ரிவால் தேர்தலில் போட்டியிடுவதற்காக டெல்லியின் பி.கே.தத் காலனியில் நிரந்தரமாக வசிப்பதாக தன் வேட்புமனுவில் பொய் கூறியுள்ளார்.
அவ்வாறு தங்கியிருப் பதற்கான ஆதாரத்தையும் கேஜ்ரிவால் இணைக்கவில்லை எனவே அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் நீக்குவதுடன் விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
தன் மீது ஐபிசி 153 பிரிவின் கீழ் பதிவாகி இருந்த வழக்கு குறித்தும் கேஜ்ரிவால் வேட்புமனுவில் குறிப்பிடவில்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.
நாளை ஒத்திவைப்பு
கிரண்வாலியாவின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விபு பக்ரூ, கேஜ்ரிவால் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்ததுடன், வழக்கின் விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெறவுள் ளது குறிப்பிடத்தக்கது.