

முலாயம் சிங் யாதவ் பேரன் – லாலு பிரசாத் மகள் திருமணத்தை முன்னிட்டு நடத்தப்படும் திலகம் சூட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். முலாயம், லாலுவுடன் அவர் உற்சாகமாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததும், அவர்கள் வீட்டு குழந்தைகளை மடியில் உட்கார வைத்துக்கொண்டு மோடி சுவாரஸ்யமாக பேசி மகிழ்ந்ததையும் உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங்கின் இளைய பேரன் தேஜ் பிரதாப் சிங் யாதவ். பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் இளைய மகள் ராஜலட்சுமி. இவர்கள் திருமணம் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடக்கவுள்ளது.
திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியான திலகம் இடும் விழா (திலக்) உத்தரப் பிரதேச மாநிலம் சைபையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதற்காக, டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு எட்டாவா மாவட்டம் சைபை கிராமத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில ஆளுநர் ராம் நாயக் வரவேற்றார்.
பின்னர் விழா மண்டபத்துக்கு வந்தடைந்த மோடியை முலாயம், அவரது மகனும் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் உட்பட இரு வீட்டாரும் உற்சாகமாக வரவேற்றனர். பிறகு, விழா மேடைக்கு அவரை முலாயம் அழைத்துச் சென்றார். சம்பந்திகள் லாலு – முலாயம் இடையே அமர்ந்து நிகழ்ச்சிகளை மோடி ரசித்தார். நகைச்சுவைக்குப் பெயர் போன லாலு, ஒரு ஜோக் சொல்ல, அவரது கையில் தட்டி உற்சாகமாக சிரித்தார் மோடி. மூவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததை அரங்கத்தில் இருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
செய்தியாளர்களிடம் லாலு கூறும்போது, ‘‘என் மகள் திருமணத்தை இன்று நாடே ஆர்வத்தோடு பார்ப்பதில் மகிழ்ச்சி. அரசியல் வேறு, சொந்த வாழ்க்கை வேறு. இரண்டையும் கலக்கக்கூடாது’’ என்றார்.
விருந்தினர்களில் பலரும் மோடியுடன் நின்று ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அகிலேஷ் மகள், மகன் உட்பட லாலு மற்றும் முலாயமின் குடும்பத்து குழந்தைகளை மோடி ஆசையோடு மடியில் உட்கார வைத்துக்கொண்டு அவர்களோடு சுவாரஸ்யமாக பேசி மகிழ்ந்தார்.
கூடவே வரும் தேசிய பாதுகாப்பு படையினரை அரங்கத்துக்கு வெளியிலேயே நிறுத்தி வைத்த மோடி சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்தார். திலகம் இடும் நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளை தேஜ் பிரதாப் மீது அட்சதை தூவி வாழ்த்தினார்.
தமிழகத்தில் நலுங்கு வைப்பது போன்றது ‘திலக்’ நிகழ்ச்சி. இதற்கு ஒன்றரை லட்சம் விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஒரு லட்சம் அழைப்பிதழ்கள் அச்சடித்து விநியோகிக்கப்பட்டிருந்தது. மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், முலாயம் சிங்கின் முன்னாள் சகா அமர்சிங், பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள், உ.பி.யின் எம்எல்ஏக்கள், மத்திய, மாநில உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பிரம்மாண்ட விழா என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மோடி வந்து சென்ற பிறகு, பாலிவுட் நடிகரும் முலாயமின் குடும்ப நண்பருமான அமிதாப் பச்சன் வந்தார்.
டெல்லி அசோகா ஓட்டலில் வரும் 26-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட பல அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். அதிலும் மோடி பங்கேற்கக்கூடும் எனத் தெரிகிறது.
இது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என உ.பி.யின் எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கூறியுள்ளது. இதுகுறித்து முலாயமின் சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ் கூறும்போது, ‘‘அரசியல்வாதிகளுக்கும் சில தனிப்பட்ட விருப்பங்கள் உண்டு. எங்கள் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வந்தார். அதை அரசியல் ரீதியாகப் பார்க்கக் கூடாது’’ என்றார்.
அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி. கூறும்போது, ‘‘அரசியலுக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சியான தருணம் இது. எங்களுடன் பிரதமர் மோடிஜி வந்து கலந்துகொண்டதை உள்நோக்கத்துடன் பார்க்கக் கூடாது’’ என்றார்.