

உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைப் பாதுகாக்க மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று காலை தொடங் கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடை பெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.
18 பக்கங்கள் அடங்கிய உரையை சுமார் 1 மணி நேரம் வாசித்தார். பாஜக தலைமையி லான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 9 மாதங்களில் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இந்த ஆண்டில் மேற் கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் ஆகியவை இந்த உரையில் இடம்பெற்றுள்ளன.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய வகை செய்யும் அவசர சட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த அவசர சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து இந்த உரையில் எந்த அறிவிப்பும் இல்லை.
குடியரசுத்தலைவர் உரையில் இடம்பெற்ற சில முக்கிய அம்சங்கள் வருமாறு:
பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கிராமப்புறங்களில் வீட்டு வசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக் காகவும் உள்கட்டமைப்பு திட்டங் களுக்காகவும் நிலம் கையகப்படுத் துவது தவிர்க்க முடியாததாகும்.
இதுபோன்ற திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்படும் போது, பாதிக்கப்படும் விவசாயி கள் மற்றும் அவர்களது குடும் பத்தினரைப் பாதுகாக்க மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.
குறிப்பாக, நிலம் கையகப் படுத்தும்போது வெளிப்படைத் தன்மையை கடைபிடித்தல் மற்றும் நியாயமான நிவாரணம் பெறுவதற் கான உரிமையை நிலைநாட்டுதல் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், நிலம் கையகப்படுத் துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் சட்டத்தில் தேவை யான திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன்மூலம், நிலம் கையகப்படுத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை கணிசமாக குறைக்க முடியும்.
கிராமப்புற மக்கள் அனை வருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இதன்கீழ் 13.2 கோடி புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அனைவருக்கும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
தீவிரவாதமும் இடது சாரி தீவிரவாதமும் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளன. இதுவிஷயத்தில் பொதுமக்களுடன் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடனும் இணைந்து செயல்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காண அரசு உறுதி பூண்டுள்ளது.
அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை பராமரிக்க மத்திய அரசு விரும்புகிறது. அதேநேரம் எல்லையையும் நமது மக்களையும் பாதுகாக்கும் விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதை தெளிவாகக் கூறி வருகிறோம். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனும் வர்த்தக உறவு மேம்பட்டு வருகிறது. இவ்வாறு பிரணாப் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், எச்.டி.தேவ கவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.