

உணவு, எரிபொருள், உரம், உள்ளிட்ட இதர வகைகளுக்காக கொடுக்கப்படும் மானியம் ரூ. 3.77 லட்சம் கோடியாகும். ஆனால் இவை போய் சேர வேண்டிய ஏழைகளில் மிகச் சிலருக்கே கிடைக்கிறது என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பொருட்களின் விலை களில் தரப்படும் மானியம் உரிய வர்களுக்கு போய்ச்சேர்வதில்லை. யாரை இலக்கு வைத்தோமோ அவர்களைவிட மிக அதிகமாக பணக்கார குடும்பங்களே இதில் பயனடைகின்றன.
இந்தியாவில் மானியம் தருவது என்பது வறுமை ஒழிப்புடன் இணைத்து பேசப்படுகிறது. ஆனால் உற்றுநோக்கினால் அது சரியான செயல் அல்ல என்பது தெரியும். எனவே நேரடியாக மானி யத்தை வங்கிகளில் பயனாளி களுக்கு கொடுப்பதே சரியாக இருக்கும். இதை செயல்படுத்த காலம் பிடிக்கலாம். எனினும் சீரமைப்பதை தாமதிக்கக்கூடாது.
தற்போதைய மானிய சலுகை நடைமுறையில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. உணவு மானியத்துக்காக அரசு செலவிட்டது ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 29 கோடி. ஆனால் பொது விநியோகத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட கோதுமையில் 54 சதவீதம், சர்க்கரையில் 48 சதவீதம், அரிசியில் 15 சதவீதம் வீணாகி உள்ளது.
அதேபோல் உர மானியத்துக் காக அரசு ரூ. 74 ஆயிரம் கோடி செலவிட்டது. உண்மையில் யூரியா, பொட்டாசியம் ஆகிய உரங்களை உற்பத்தி செய் பவர்கள்தான் இந்த மானியத்தில் கணிசமாக லாபம் அடைகிறார்கள்.
சரியானவர்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்க்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. எரிவாயு பயன்படுத்தும் அடித்தட்டு மக்களில் 50 சதவீதம் பேர் ஒட்டுமொத்த எரிவாயு சப்ளையில் 25 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
‘ஜாம்’ திட்டம்
அரசு மானியங்கள் பயனாளி களை உரிய முறையில் சென்றடைவதற்கு ஜன் தன் யோஜனா (வங்கிக் கணக்கு எண்), ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை இணைக்கும் ஜாம் (ஜேஏஎம்) திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன் தன் யோஜனா, ஆதார், மொபைல் ஆகியவற்றின் முதல் எழுத்துகளை இணைத்து இத்திட்டம் ஜாம் (ஜேஏஎம்) என அழைக்கப்படுகிறது.
இவை மூன்றும் இணைக்கப்பட்டு விட்டால், பயனாளிகளுக்கு வழங்கப்படும் அனைத்து மானியங்களும் அவர்களை உரிய முறையில் சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும்.
ஏழை பயனாளிகளை விட, பணக்காரர்கள் அதிக அளவு பணப்பயன்களைப் பெறுகின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைப்புத் திட்ட பயன்களை, அஞ்சலக கணக்குகளோடும் இணைக்கலாம்.