

புதுச்சேரி உட்பட 9 மாநிலங்களுக்கு விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் புதிய ஆளுநர்கள் பட்டியலில் ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரலேகா உட்பட தமிழகத்தின் இரண்டு தலைவர்களின் பெயர் பரிசீலிக்கப் பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
புதுச்சேரி, பிஹார், மணிப்பூர், இமாச்சாலப் பிரதேசம், பஞ்சாப், சண்டீகர், மணிப்பூர் மற்றும் நாகா லாந்து, அஸ்ஸாம் ஆகிய 9 மாநிலங்களின் ஆளுநர்கள் பதவி காலியாக உள்ளன. இவற்றின் ஆளுநர் பொறுப்பை அதன் அருகிலுள்ள மாநில ஆளுநர்கள் கூடுதலாக கவனித்து வருகின்றனர். இதுதவிர மேலும் சில மாநில ஆளுநர்களின் பதவிக் காலம் முடிய உள்ளது.
மேகாலாயா ஆளுநர் கே.கே.பால் (மணிப்பூர்), அந்தமான் துணைநிலை ஆளுநர் அஜய் குமார் சிங் (புதுச்சேரி), திரிபுராவின் பத்மநாப பாலகிருஷ்ண ஆச்சார்யா (நாகாலந்து), ராஜஸ்தானின் கல்யாண் சிங் (இமாச்சாலப் பிரதேசம்), மேற்கு வங்காளத்தின் கேசரிநாத் திரிபாதி (பிஹார்), ஹரியானாவின் கே.எஸ்.சோலங்கி (பஞ்சாப் மற்றும் சண்டிகர்) ஆகியோர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.
இந்நிலையில் காலியாக உள்ள மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்து வருகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “பாஜகவின் மூத்த தலைவர்களான உ.பி.யின் லால்ஜி டாண்டண், ராஜஸ்தானின் ராமதாஸ் அகர்வால், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் நஜ்மா ஹெப்துல்லா, டெல்லியின் வி.கே.மல்ஹோத்ரா, ஜார்க்கண்டின் யஷ்வந்த் சின்ஹா மற்றும் சந்திரலேகா உட்பட தமிழகத்தின் இரண்டு தலைவர்களின் பெயர்களும் ஆளுநர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பட்டியல் விரைவில் இறுதி செய்யப்பட்டு, குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கப்படும்” என்றனர்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி நடத்தி வந்த ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர். கட்சியைக் கலைத்து விட்டு இருவரும் பாஜகவில் இணைந்தனர். ஒவ்வொரு முறையும் மத்தியில் புதிய ஆட்சி அமையும் போது பெரும்பாலான மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் பலர் பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். காலியான இடத்துக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.