

எரிசக்தி துறையில் நடந்த 10 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை மறைக்கும் முயற்சியாகவே தான் கைது செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் கைதானவர் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோலிய துறை உட்பட பல்வேறு அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்டு, பெரு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு வந்தது சமீபத்தில் வெட்டவெளிச்சமானது. இதில் அந்த அமைச்சக ஊழியர்களே முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பல இடைத்தரகர்களும் இருந்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு அமைச்சக உயரதிகாரிகளுக்கும், பெரும் தொழில் நிறுவன அதிபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளரான சைக்கியாவை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் செய்தியாளர்களை நோக்கி, எரிசக்தி துறையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. அதனை மறைக்கவே என்னை கைது செய்துள்ளனர் என்று கூச்சலிட்டார்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் வழக்கை திசை திருப்பும் நோக்கிலேயே அவர் இவ்வாறு பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.