

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக தேநீர் வியாபாரி பல்ராம் பாரி மீண்டும் களம் இறங்கியுள்ளார்.
19-வது முறையாக தேர்தல் களத்தில் இறங்கும் இவரை இம்முறையாவது மக்கள் தேர்தெடுப்பார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
டெல்லியின் சாந்தினி சவுக் தொகுதிக்கு உட்பட்ட காந்தி காலி தெரு ஓரத்தில் தேநீர் விற்பவர் பல்ராம் பாரி. கடந்த 26 ஆண்டுகளாக நகராட்சி, மக்களவைத் தேர்தல் என இதுவரை 18 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டிருக்கும் இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த நகராட்சித் தேர்தலை தவிர மற்ற அனைத்து தேர்தலிலும் டெபாசிட்டை இழந்துள்ளார்.
"தேநீர் விற்பவரை நாட்டின் பிரதமராக ஆக்கிய மக்கள் ஒருநாள் என்னையும் தேர்ந்தெடுப்பார்கள்" என்று கூறும் இவர் 19-வது முறையாக டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விணப்பிக்கத் தேவையான பணத்தை தனது மனைவி மற்றும் உறவினர்களிடமிருந்து கடனாக பெற்றுக்கொண்டுள்ளார்.
இம்முறை வெற்றிபெற நிச்சயம் வாய்ப்பு இருப்பதாக கூறும் பல்ராம், வாக்கு சேகரிக்க மக்களை தேடி செல்லும் நேரத்தில் அவரது மகள் தேநீர் வியாபாரத்தை பார்த்துக்கொள்கிறார்.
''மக்களிடம் என்னை விளம்பரப்படுத்த பேண்ட் வாத்தியங்களோடும் ஒலிப்பெருக்கியுடனும் செல்ல என்னிடம் வசதி இல்லை. காரில் செல்லவோ செல்ஃபோன் மூலம் வாக்க சேகரிக்கவும் வழி இல்லை. என் மீதும் எனது கொள்கைகள் மீதும் மட்டுமே எனக்கு நம்பிக்கை உள்ளது.
இந்தப் பகுதியின் பிரச்சினை குறித்து எனக்கு நன்றாக தெரியும். மற்ற வேட்பாளர்களைப் போல நானும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளேன்.
ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று எனது கொள்கைகள் குறித்து விளக்கி கூறி உள்ளேன். தலைநகர் டெல்லியில் பிரச்சினைகள் அதிகம் உள்ளது. அதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்.
இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதே எனது கருத்து. நான் வெற்றி பெற்றால், எந்தக் கட்சி கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி எடுக்கிறதோ, அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன்" என்றார்.
சாந்தினி சவுக் தொகுதியில் பாஜக-வின் சுனில் குமார் குப்தா மற்றும் ஆம் ஆத்மியின் ஆல்கா லம்பாவையும் சுயேச்சை வேட்பாளர் பல்ராம் எதிர்கொள்கிறார்.