பழைய மனநிலையை மாற்றுங்கள்: இந்திய தூதர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

பழைய மனநிலையை மாற்றுங்கள்: இந்திய தூதர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

பழைய மனநிலையிலிருந்து விடுபட்டு, சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்த பாடுபட வேண்டும் என்று வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்கள் மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 4 நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் 120க்கும் மேற்பட்ட இந்திய தூதர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டின் தொடக்கமாக, வெளிநாடுகளில் பணியில் இருக்கும் போதே உயிரிழந்த அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ‘வளர்ச்சிக்கான உத்தி: புதிய பார்வை, புதிய வீரியம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் மோடி பேசியதாவது:

உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. அனைத்து நாடுகளும் நம்முடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளன. இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பு சராசரி என்ற நிலையில் இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்க நீங்கள் உதவ வேண்டும். இதற்காக, இந்திய தூதர்கள் பழைய மன நிலையை மாற்றிக் கொண்டு, மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப தங்களை நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் இதுதொடர்பான சர்வதேச நாடுகளின் மனநிலையை மாற்ற வும் நாம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் துடிப்பான பிரதிநிதிகளாக நீங்கள் (இந்திய தூதர்கள்) பணியாற்றி வருகிறீர்கள். நாட்டின் புகழை உலக நாடுகள் மத்தியில் பரப்புவதற்கு நீங்கள் முக்கிய பங்காற்றி வருகி றீர்கள். தொடர்ந்து உங்களது ஒத்துழைப்பு அவசியமாகிறது.

துணைத் தூதரகங்கள் உட்பட இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அயராது உழைக்க வேண்டும். உங்களுடைய முயற்சியால் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் யோகா பயிற்சியின் மூலம் தீர்வு காண முடியும் என்று நீங்கள் எடுத்துக் கூற வேண்டும்.

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் டிஜிட்டல் நூலகத்தை செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிற நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

இந்த மாநாட்டைக் குறிக்கும் வகையில், வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் நினைவுப் பலகையை பிரதமர் மோடியும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் திறந்து வைத்தனர். இதில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in