

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை. இச்சட்டம் தொடர் பான எதிர்க்கட்சிகளின் கட்டுக்கதை களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என பாஜக எம்.பிக் களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி யுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க் கட்சிகளை சமாளிப்பது, விவாதங் களுக்குத் தயாராவது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது:
இக்கூட்டத்தில் பேசிய மோடி, `நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை. இச்சட்டம் விவசாயிகளுக்கு பலனளிக்கும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் ஆலோசனைகள், கோரிக்கைகளின் அடிப்படையில்தான் இச்சட்டத் திருத்தத்தை நமது அரசு கொண்டு வந்தது. எதிர்க்கட்சிகளின் கட்டுக் கதைகளை நமது எம்.பி.க்கள் தகர்க்க வேண்டும். இச்சட்டம் நாட்டுக்கும் விவசாயிகளுக்கும் நல்லது என்பதை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும்’ எனக் கூறினார்.
நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயல், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் மற்றும் நேரடி மானியத் திட்டம் ஆகியவை குறித்து விளக்கினர்.இவ்வாறு, ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.
சிவசேனா எதிர்ப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவசேனா பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறும்போது, “நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை இப்போதைய வடிவத்தில் நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்க மாட்டோம். விவசாயிகளின் குரல்வளையை நெறித்து பாஜக பாவத்தை தேடிக்கொள்ளக்கூடாது. தொழில் வளர்ச்சிக்கு எதிரியல்ல. ஆனால், கட்டாயப்படுத்தி நிலங்களை பறிக்கக்கூடாது” எனத் தெரிவித் துள்ளார்.