

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் பதவி உயர்வை தவறவிட்டிருந்தாலும் அதற்கான ஓய்வு கால சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: துறை ரீதியான பதவி உயர்வு குழு (டிபிசி) கூட்டம் தாமதமாக நடைபெற்ற காரணத்தால் பதவி உயர்வை தவறவிட நேர்ந்ததாக அரசு ஊழியர்கள் சிலர் புகார் கூறிவந்தனர். டிபிசி கூட்டம் தாமதம் காரணமாக பதவி உயர்வை தவறவிட்டிருந்தாலும், ஓய்வுக் காலத்தில் அதற்கான சலுகைகளைப் பெற அவர்களுக்கு தகுதி உள்ளது. எனவே, டிபிசி கூட்டம் தாமதம் காரணமாக பதவி உயர்வை தவறவிட்ட அரசு ஊழியர்களுக்கு இனி ஓய்வு கால சலுகையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் பதவி உயர்வுக்கான பரிசீலனை பட்டியலில் இருந்த ஊழியர்களுக்கு இது பொருந்தாது. இந்த உத்தரவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.