

40 மணிநேரங்கள் இடைவெளியில்லாமல் யோகா செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்த இந்தியர் யோகராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் யோகா பயிற்சியாளராக இருந்து வருகிறார் யோகராஜ். இவர் தொடர்ந்து 40 மணி நேரம் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்தார்.
இதனையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பாராட்டு தெரிவிக்கும் போது, “கின்னஸ் சாதனை படைத்த யோகராஜுக்கு எனது வாழ்த்துக்கள். யோகாவை ஹாங்காங்கில் பிரபலமடையச் செய்தும், யோகராஜுக்கு ஆதரவும் அளித்து வரும் இந்திய தூதரகத்தை நான் பாராட்டுகிறேன். ” என்று பதிவிட்டுள்ளார்.
40 மணிநேரம் இடைவிடாது யோகா செய்த யோகராஜ், சுமார் 1,500 ஆசனங்களை செய்து காட்டினார்.
இந்தச் சாதனை கைகூடினால் அந்தச் சாதனையை பிரதமர் மோடிக்கு சமர்ப்பிப்பேன் என்று அவர் ஏற்கெனவே கூறியிருந்தார். காரணம் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவிக்க பிரதமர் மோடியின் பங்களிப்பு அதிகம்.
5 வயது முதல் யோகா பயிற்சி செய்து வரும் யோகராஜ், 12 வயதில் அதனை கற்றுக் கொடுக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.