Published : 23 Feb 2015 08:40 AM
Last Updated : 23 Feb 2015 08:40 AM
பிஹாரின் 24-வது முதல்வராக நிதிஷ் குமார் (63) நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
மார்ச் மாதம் சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்படி புதிய அரசை ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக் காக கூடுதல் நிதி கேட்டு பிரதமர் நரேந் திர மோடியை மார்ச் முதல் வாரத்தில் நிதிஷ் குமார் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
22 அமைச்சர்கள் பொறுப்பேற்பு
பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் நிதிஷ் குமாருடன் மூன்று பெண்கள் உட்பட 22 அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்கள் அனைவரும் நிதிஷின் நம்பிக்கைக்கு உரியவர்கள்.
முன்னாள் பிரதமர் தேவ கவுடா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பிரதமரை சந்திக்க முடிவு
மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக கூடுதல் நிதி கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிதிஷ்குமார் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் நிருபர்களிடம் கூறியபோது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடமிருந்து கூடுதல் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது, இதுதொடர்பாக பிரதமர் மோடியை முதல்வர் நிதிஷ்குமார் மார்ச் மாதத்தில் சந்திக்க உள்ளார் என்று தெரிவித்தார்.
உட்கட்சி பூசல் குழப்பம்
மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மோசமான தோல்வியைத் தழுவியது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து 2014 மே 17-ம் தேதி நிதிஷ்குமார் விலகினார். அதைத் தொடர்ந்து ஜிதன் ராம் மாஞ்சி மே 20 ம் தேதி புதிய முதல்வராகப் பொறுப்பேற்றார்.
கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு இருந்தபோதிலும் அதையெல்லாம் மீறி மாஞ்சியை முதல்வராக்கியது நிதிஷ்குமார்தான். இந்நிலையில் கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிலரை தன் பக்கம் வளைத்து நிதிஷுக்கு எதிராக திருப்பினார் மாஞ்சி. இதனால் கட்சித் தலைமைக்கும் மாஞ்சிக்கும் இடையே மோதல் மூண்டது. மாஞ்சியின் சதியை முறியடிக்க நிதிஷ் நேரடியாக களம் இறங்கினார்.
இந்த சூழ்நிலையை சாதகமாக பயன் படுத்திய பாஜக மாஞ்சிக்கு ஆதரவு அளித்தது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு கடந்த 20-ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந் தது. ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் அன்று காலை ஜிதன் ராம் மாஞ்சி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அரசியல் சாணக்கியர்
9 மாதங்களுக்குப் பிறகு பிஹார் மாநிலத்தில் நான்காவது முறையாக முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் இப்போது அமர்கிறார்.
இன்னும் ஐந்து மாதங்களில் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு சவால்கள் நிறைந்த இந்தத் தேர்தலை அரசியல் சாணக்கியரான நிதிஷ் எவ்வாறு எதிர்கொள்வார் என்பது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.