

'பிஹார் முதல்வராக என்னை அறிவித்து, தனது கைப்பாவை போல் நான் இருப்பேன் என்று நினைத்தது நிதிஷ் குமார் செய்த முட்டாள்தனம்' என்று பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தெரிவித்தார்.
இது குறித்து பாட்னா முதல்வர் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி, "நிதிஷ் குமார் என்னை முதல்வராக்கினார். அவரது கைப்பாவை போல நான் அவரது சிந்தனைக்கு ஏற்றவாறு ஆடுவேன் என்றே அவர் வியூகம் செய்தார்.
ஆனால் அதுதான் அவர் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம். தனது தவறை சரி செய்து கொள்ள தற்போது அவர் வழிதேடுகிறார்.
மக்களின் நலனுக்காக உழைக்க எண்ணினேன். ஆனால், எப்போது அவர் என்னை கைப்பாவையாக ஆட்டி வைக்க நினைக்கிறார் என்று உணர்ந்தேனோ, அப்போதே அவரது வியூகங்களை புரிந்து கொண்டேன்.
பிஹாரில் அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும், இடைத்தரகர்களும் ஊழலில் ஈடுபடுவதை தெரிந்து அவர்களின் மீது நான் நடவடிக்கை எடுத்தேன்.
அதிலிருந்து அவருக்கு என் மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. எனது இந்த குறுகிய ஆட்சிக் காலத்தில் நான் ஏழைகளின் நலனுக்காக நடவடிக்கைகளை அதிக அளவில் எடுத்துள்ளேன்.
நான் பதவி விலக வேண்டும் என்று அவர் கூறியிருந்தால், உடனடியாக ராஜினாமா செய்திருப்பேன். ஆனால் அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூலம் தகாத வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்ட நினைத்தார்.
ஏழைகளுக்கு, தலித் மக்களுக்கு நல்லது செய்யக்கூடாது என்ற பழமையான மனப்போக்குடன் நிதிஷ் குமார் இருக்கிறார். இதை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.
முதல்வராக பதவியேற்ற பின்னர் ஓரிரு மாதங்கள் நான் நெருக்கடியில் பணியாற்றினேன். ஆனால் அதன் பின்னர் நான் அதிலிருந்து வெளிவந்து எனது பணியை உணர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். சாதி, சமூகம் பாகுபாடு பாராமல் அனைவருக்காகவும் பணியாற்றுகிறேன்.
ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் தோற்றுப்போகும் நிலை ஏற்பட்டால், உணர்ச்சிவசப்பட்டு அவையில் உரை நிகழ்த்தி, உடனடியாக பதவி விலகுவேன். ஆனால் அப்படி எதுவும் நடக்காது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனது வேண்டுகோளை ஏற்ற ஆளுநர் கேசரிநாத் திரிபாதிக்கு நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் ஆளுநரை சந்தித்து ரகசிய முறையிலான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கேட்க உள்ளேன். எனக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு நெருக்கடி தரப்படுவதாலும் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதனாலும் நான் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்.
நிதிஷ் குமார் தனக்கு உள்ள ஆதரவை நரூபிக்க டெல்லிக்கு சென்று மிகப் பெரிய செலவுகளை செய்கிறார். ரகசிய முறையிலான நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் தோல்வியடைந்தால், நிச்சயம் முதல்வர் பதவியிலிருந்து விலகி விடுவேன். யாரும் சொல்வதற்கு முன்பே நான் பதவியிலிருந்து வெளியேறுவேன்.
ஆனால் மல்யுத்த வீரரைப்போல விடாமல் நான் நிதிஷுடன் மோதுவேன். எனக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நான் கவலைப்படவில்லை" என்றார் மாஞ்சி.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று நிதிஷ்குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து ஜிதன்ராம் மாஞ்சி புதிய முதல்வராகப் பொறுப்பேற்றார். தற்போது பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் மாஞ்சிக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராக ஏதுவாக கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக கடந்த 7-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பேரவையை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இந்த பரபரப்பான பின்னணியில் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் தனக்கு 130 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். மறுபுறம் முதல்வர் மாஞ்சியும் ஆளுநரை சந்தித்து, பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார்.