புதிய பட்டியல் குறித்து விசாரணை: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி

புதிய பட்டியல் குறித்து விசாரணை: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி
Updated on
2 min read

சுவிட்சர்லாந்தில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளதாக புதிதாக வெளியாகி உள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பட்டியலை வெளியிட்ட அமைப்பிட மிருந்து கூடுதல் விவரங்கள் பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சட்டவிரோதமாக (வரி செலுத்தாமல்) பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்பதற்காக கடந்த 7 மாதங்களாக மத்திய அரசு பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றிருந்தேன். அப்போது அந்த நாட்டின் நிதியமைச்சரை சந்தித்து, கருப்பு பணத்தை மீட்பது குறித்து ஆலோசித்தேன்.

இந்நிலையில் புதிதாக வெளியாகி உள்ள எச்எஸ்பிசி முதலீட்டாளர்கள் பட்டியலில் இந்தியர்களின் பெயர்களும் வெளியாகி உள்ளன. இதில் சில பெயர்கள் ஏற்கெனவே வெளியான பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதில் புதிதாக இடம் பெற்றுள்ளவர்களின் கணக்குகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

ஏற்கெனவே வெளியான எச்எஸ்பிசி முதலீட்டாளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியர்களில் 350 பேரின் கணக்குகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதில் சட்டவிரோதமாக கணக்கு வைத் திருந்த 60 பேர் மீது வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மீதம் உள்ள கணக்குகள் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் மதிப்பீடு செய்யப்படும்.

அதேநேரம் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்குகள் அனைத்துமே சட்டவிரோதமானவை அல்ல. சிலர் தாங்கள் கணக்கு வைத்திருப்பது குறித்து வருமான வரித் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எஸ்ஐடி ஆலோசனை

கருப்புப் பணம் பதுக்கியவர்களின் புதிய பட்டியல் வெளியானது குறித்து, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் எஸ்ஐடி துணைத் தலைவர் அரிஜித் பசாயத் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “இப்போதைய பட்டியலில் புதிதாக 100 இந்தியர்களின் பெயர் இருக்கலாம் என கருதுகிறோம். இவர்கள் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதற்கான ஆதாரம் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு அமலாக்கத் துறை மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ஆகியவற்றை கேட்டுக் கொண்டுள்ளோம். இதுதொடர்பான அனைத்து விசாரணை யையும் திட்டமிட்டபடி வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் முடித்துவிடுவோம்” என்றார்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ஏற்கெனவே வெளியான எச்எஸ்பிசி முதலீட்டாளர்கள் பட்டியலில் 628 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற் றிருந்தன. இதில் 200 பேர் இந்தியாவில் வசிக்கவில்லை அல்லது அவர்களை அடையாளம் காண முடிய வில்லை. எனவே 428 பேரின் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவர் களது கணக்குகளில் மொத்தம் ரூ.4,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து மற்றும் பிற நாடுகளில் உள்ள எச்எஸ்பிசி வங்கி கிளைகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்குமாறு, இந்தப் பட்டியலை வெளியிட்டவர்களிடம் வருமான வரித் துறையினர் கோரிக்கை வைத் துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in