மேல்முறையீட்டு வழக்கு விசாரணை: சொத்து மதிப்பீடு செய்ததில் குளறுபடி - சசிகலா தரப்பு 7-வது நாளாக வாதம்

மேல்முறையீட்டு வழக்கு விசாரணை: சொத்து மதிப்பீடு செய்ததில் குளறுபடி - சசிகலா தரப்பு 7-வது நாளாக வாதம்
Updated on
2 min read

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 2-வது குற்ற வாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவின் சொத்துகளை மதிப் பீடு செய்ததில் த‌மிழக லஞ்ச ஒழிப்புத்துறை நிறைய குளறு படிகள் செய்துள்ளது என அவரது வழக்கறிஞர் ஆர்.பசன்ட் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

சசிகலாவின் தரப்பு வழக்கறிஞர் ஆர்.பசன்ட் வாதிட்டதாவது:

சசிகலாவின் சொத்துகள் தகுதி வாய்ந்த வல்லுநர்களை கொண்டு மதிப்பீடு செய்யப்படாததால், விசாரணையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சசி எண்டர்பிரை சஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ் நிறுவன கட்டிடங்களை மதிப்பீடு செய்ததில் குளறுபடி நடந்துள்ளது. வழக்கில் தொடர்பில்லாத சாத்திரிநட்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான கட்டிடம் அடையாரில் உள்ளது. 1991-96 காலக்கட்டத்தில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தது. ஆனால் இது சசிகலாவுக்கு சொந்தமான கட்டிடம் என்றும், அதன் மதிப்பு ரூ.3 கோடி என்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மதிப்பிட்டுள்ளது. இது தொடர் பாக அரசு தரப்பு சாட்சி கோவிந்தன் சாட்சியம் அளித்துள்ளார். அதே போல வழக்கு கால‌த்துக்கு முன்பு வாங்கப்பட்ட இடங்களில் வழக்கு காலத்துக்கு பிறகு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்டிடங்கள் வழக்கு காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதே போல கட்டிடங்களின் கட்டுமானத்தை கட்டப்பட்ட காலக் கட்டத்தைக் கொண்டு மதிப்பிடா மல், விசாரணை செய்த காலக்கட் டத்தை கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்போதைய சந்தை மதிப்பை பல மடங்காக உயர்த்திக் காட்டி, சசிகலாவின் சொத்து மதிப்பு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சமர்ப்பித்த ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

எனவே நீதிமன்றத்தில் முறை யாக நிரூபிக்கப்படாத தொகையை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத் தார். இதையடுத்து அடுத்தக்கட்ட விசாரணையை வெள்ளிக்கிழ மைக்கு (இன்றைக்கு) நீதிபதி குமாரசாமி ஒத்தி வைத்தார்.

பவானிசிங்கை நீக்கக்கோரும் மனு மீது இன்று விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக்கோரிய திமுகவின் மனுவில் சில தவறுகள் இருந்ததால் நீதிபதி குமார் ஏற்க மறுத்தார். அந்த மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

சுப்பிரமணியன் சுவாமி வாதிட முடியாது

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் மூன்றாம் தரப்பாக சேர்க்கக்கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவ‌து:

இவ்வழக்கின் முதல் புகார்தாரர் என்பதால் சுப்பிரமணியன் சுவாமிக்கு மேல்முறையீட்டு ஆவணங்களை வழங்க உச்ச நீதிமன்ற‌ம் அனுமதி அளித்துள்ளது. எனவே இவ்வழக்கில் அரசு வழ‌க்கறிஞருக்கு உதவ சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதியளிக்கப்படுகிறது. மேலும் கால அவகாசத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அனுமதித்தால் அவர் தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம். ஆனால் இவ்வழக்கில் சுதந்திரமாக செயல்படவோ, இறுதி வாதம் நிகழ்த்தவோ அனுமதி வழங்கமுடியாது''என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in