

பிரதமர் மோடி அரசின் சாதனைப் பட்டியல்கள் என்ற பெயரில் தேர்தல் விதிமுறைகளை மீறி பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்கள் குறித்து ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான சாதனைப் பட்டியல்களை விவரித்து, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தேசிய அளவிலான பல பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தேர்தல் விதிமுறைகளுக்கு மீறிய செயல் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் அசுதோஷ், "டெல்லியில் இன்று ஒவ்வொரு பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் பாஜக விளம்பரம் அளித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில் இது முற்றிலுமாக தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறிய செயல்.
தொலைக்காட்சிகளில் தேர்தலுக்கு ஆதரவு கோரும் விளம்பரங்கள் வெளியிட தடை இருக்கும் நிலையில், பத்திரிகைகளில் மட்டும் இதனை வெளியிட எவ்வாறு அனுமதிக்கலாம்? இவற்றில் சட்ட ரீதியான மாற்றம் தேவைப்படுகிறது. நாடெங்கும் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் பத்திரிகைகளில் உள்ள இந்த விளம்பரங்கள் நிச்சயம் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
ட்விட்டர் பக்கத்திலும் இதனை குறிப்பிட்டு பாஜக-வின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பியுள்ள அசுதோஷ், "முதல் பக்கத்தில் விளம்பரம் அளிக்கும் அளவுக்கு இவர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கிறது. அதற்கான ஆதாரத்தை பாஜக அளித்தாக வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல காங்கிரஸ் கட்சியின் மணிஷ் திவாரி கூறும்போது , "மத்திய அரசு செயல்படுத்தாத பல திட்டங்கள் குறித்து கற்பனையான விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசே செயல்படாதவற்றைக் காட்டி வாக்கு சேகரிக்கலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.