

கேரள மாநிலம் ஆலப்புழையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசியதாவது:
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. பெரு நிறுவனங்கள் மற்றும் இந்துத்வா சக்திகளுடன் மத்திய அரசு கைகோத்துக் கொண்டு மக்களை துன்பத்துக்கு ஆளாக்குகிறது. மேலும், நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் பல அவசர சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களின் விவரங்களை மக்களிடம் இருந்து மத்திய அரசு மறைக்கிறது.
நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கலை, கலாச்சாரம் போன்றவற்றில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது. மோடி தலைமையில் மத்திய அரசு பதவியேற்ற இந்த 9 மாத காலத்தில் 2 வகைகளில் மக்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. ஒன்று கார்ப்பரேட் எனப்படும் பெரு நிறுவனங்கள், மற்றொன்று ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்துத்துவா. ஆர்.எஸ்.எஸ். - பாஜக என்ற கூட்டு நிறுவனங்கள் நடத்தும் அரசுதான் இப்போது மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இடதுசாரி கட்சிகளை பலப்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.