ஜேவிஎம் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் பாஜக.வில் இணைந்தனர்: நீதிமன்றத்தில் முறையிட ஜேவிஎம் முடிவு

ஜேவிஎம் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் பாஜக.வில் இணைந்தனர்: நீதிமன்றத்தில் முறையிட ஜேவிஎம் முடிவு
Updated on
1 min read

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்த்ரிக்) கட்சியைச் (ஜேவிஎம்) சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் டெல்லியில் உள்ள ஜார்க்கண்ட் இல்லத்தில் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் நேற்று அக் கட்சியில் இணைந்தனர்.

இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் சின்ஹா நேற்று கூறும்போது, “ஜேவிஎம் கட்சியைச் சேர்ந்த நவீன் ஜெய்ஸ்வால் (ஹதியா) அமர் குமார் பவுரி (சந்தன்கியாரி), கணேஷ் கஞ்சு (சிமேரியா), அலோக் குமார் சவுராசியா (தல்டோகஞ்ச்), ரஞ்சித் சிங் (சரத்) மற்றும் ஜாங்கி யாதவ் (பர்கதா) ஆகிய 6 எம்எல்ஏக்களும் முதல்வர் ரகுவர் தாஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்” என்றார்.

ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, கூட்டணியில் உள்ள அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இப்போது 6 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் அதன் பலம் 48 ஆக அதிகரித் துள்ளது.

இதற்கிடையே, மற்ற கட்சி களை உடைக்கும் செயலில் பாஜக வினர் ஈடுபடுவதாக ஜேவிஎம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி குற்றம் சாட்டி உள்ளார்.

இதற்கு முதல்வர் ரகுவர் தாஸ் பதில் அளிக்கும்போது, “மற்ற கட்சிகளை உடைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. மாநில வளர்ச்சிக்காக பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்க விரும்புகிறவர்களை வரவேற் கிறோம்” என்றார்.

பாஜகவில் சேரப்போவதாக புகார் எழுந்ததால், தனது கட்சி எம்எல்ஏக்கள் 4 பேரை மராண்டி நேற்று முன்தினம் இடைநீக்கம் செய்தார். இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அருகே தங்களுக்கு இருக்கைகளை ஒதுக்குமாறு சபாநாயகருக்கு 6 எம்எல்ஏக்களும் நேற்று முன்தினம் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஜேவிஎம் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் பிரதீப் யாதவ் கூறும்போது, “அரசியலமைப்பு சட்டத்தின் 10-வது பிரிவின்படி ஒரு கட்சியின் எம்எல்ஏக்களில் 3-ல் 2 பேர் வேறு கட்சியில் இணைந்தாலோ, தனி கட்சி தொடங்கினாலோ அது செல்லாது. எனவே, பாஜகவில் சேர்ந்த 6 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக ஆளுநரிடம் முறையிடுவோம். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தை அணுகு வோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in