Published : 06 Feb 2015 12:55 pm

Updated : 06 Feb 2015 12:55 pm

 

Published : 06 Feb 2015 12:55 PM
Last Updated : 06 Feb 2015 12:55 PM

வண்ணக் கனவுகள் வருமா?

அமெரிக்க மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் புகழ்பெற்ற வாசகம் ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது’ என்பது. 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வாஷிங்டன்னில் நடைபெற்ற மனித உரிமை விழிப்புணர்வுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் முத்திரை வாசகம் இது. அவரது கனவு, சரித்திரத்தை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது.

நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் கனவு காணுங்கள் என்றார். ஆனால் நமக்கெல்லாம் இதைப் போன்ற கனவுகள் இருக்கின்றனவோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் நிம்மதியாக உறங்குகிறோம். அப்போது நாமும் கனவு காண்கிறோம். சுவாரசியம் நிறைந்த சுகமான கனவுகள் அவை. ஏன்தான் முடிந்ததோ என்று எண்ணுமளவுக்கு அவற்றில் பல சுகமானவையாயும் இருக்கத்தான் செய்யும். சில மட்டும் மனத்தில் துயரத்தைக் கொண்டுவந்து போடும்.

கனவுகள் பற்றி சுவாரசியமான பல தகவல்கள் உலவுகின்றன. நமது கனவுகள் எல்லாம் கறுப்பு வெள்ளை என்கிறார்கள். சில விநாடிகள்கூட நீடிக்காதவை நமது கனவுகள் என்கிறார்கள். கனவுகள் தொடர்பாகப் பல ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நமது கனவுகளில் நாம் பறக்கிறோம், தேர்வு எழுத முடியாமல் திணறுகிறோம், பேருந்தையோ ரயிலையோ தவற விட்டுவிட்டுத் தடுமாறுகிறோம். இப்படியான பொதுவான கனவுகள் எல்லோருக்கும் வருகின்றனவாம்.

யானை துரத்துவது, பாம்பு துரத்துவது, நாய் துரத்துவது போன்ற கனவுகளையும் நாம் காண்கிறோம். பார்ப்பது, கேட்பது போன்ற உணர்வு கொண்ட உணர்வுபூர்வ கனவால் நாம் பயப்படுகிறோம், பதறுகிறோம், சில சமயங்களில் பரவசப்படுகிறோம். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கியவை கனவுகள்.

இரவில் ஏதோ ஓர் அமானுஷ்ய உலகில் உலவியதைப் போல் கண்ட கனவைக் காலையில் விவரிக்கிறோம். அப்போது நாம் கனவென்னும் அனுபவத்தையே சொல்கிறோம். நாம் பார்த்த, படித்த அறிந்துகொண்ட விஷயங்களிலிருந்து கனவு தனக்கான காட்சிகளை உருவாக்கிக்கொள்கிறது. பல சந்தர்ப்பங்களில் கனவில் பார்த்த, கேட்ட ஒரு விஷயத்தை வாழ்வில் சில காலம் கழித்து எதிர்கொள்ளும் சூழலும் உருவாகிறது. இதை நம்மால் நம்பவே முடியாமல் போகிறது. ஆனால் மூளையின் அதியற்புத நினைவுத் திறனால் இது சாத்தியமாகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.

என்ன காரணத்தால் கனவு வருகிறது என்னும் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. ஆனால் பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் நான்கு முதல் ஆறு கனவுகள் காண்கிறோமாம். உறக்கத்தின்போது கண்களின் விரைவான இயக்க நிலையில் மூளை விழித்திருக்கையில் செயல்படுவதைப் போன்று செயல்படுகிறது. இந்தச் சமயத்தில் கனவுகள் ஏற்படுகின்றன, ஆனால் இந்தச் சமயத்தில் மட்டும்தான் கனவு காண்கிறோம் என்றும் சொல்வதற்கில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

எல்லாக் கனவுகளும் அர்த்தமுள்ளவை என்றும் சொல்ல முடியாதாம். சில கனவுகளுக்கு ஆழமான பொருள்கள் உள்ளன. சில கனவுகள் நமது வாழ்வின் சம்பவங்களை பிரதியெடுக்கும் சாதாரணச் சம்பவங்களைக் கொண்டவை. பெரும்பாலான கனவுகளை நாம் மறந்துவிடுகிறோம். உணர்ச்சியமயமான கனவுகளைக் கூட நம்மால் நினைவுகூர முடியாமல் போய்விடுகிறது. இது ஏன்? பொதுவாக நாம் உறங்கும்போது எதையும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. மேலும் கனவு காணும்போது கனவு மட்டுமே நிகழ்கிறது அதை நினைவில் வைத்துக்கொள்ளும் செயல் நடைபெறுவதில்லை என்று சொல்கிறார்கள். அதனால் தான் கனவுகளை மறந்துவிடுகிறோமாம்.

ஆனால் கனவுகள் மீது பெரும் ஆர்வம் கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் கனவுகள் முக்கியமானவை என்று நினைப்பவர்கள் கனவுகளை அதிகம் நினைவில் வைத்துக்கொள்கிறார்களாம்.

கனவுகள்தூக்கம்வண்ணக் கனவுகள்எனக்கு ஒரு கனவு இருக்கிறதுமனோதத்துவம்

You May Like

More From This Category

More From this Author