Published : 18 Feb 2015 18:26 pm

Updated : 18 Feb 2015 18:26 pm

 

Published : 18 Feb 2015 06:26 PM
Last Updated : 18 Feb 2015 06:26 PM

ஐ.டி. நிறுவன ஆட்குறைப்பைத் தடுக்க நடவடிக்கை: மார்க்சிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு பிப் 16-ம் தேதி தொடங்கி காமராஜர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 3வது நாளான இன்று (புதன்கிழமை) சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:

ஐ.டி. நிறுவனங்களில் ஆட்குறைப்பைத் தடுக்க நடவடிக்கை:

தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆட்குறைப்பும், வேலையின்மையும், சமூகத்தின் பெரும் தீங்கு என்றும், முதலாளித்துவ லாப வெறி காரணமாக அதிகரிக்கிறது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு குறிப்பிட விரும்புகிறது. இந்த சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில், அரசுகள் உறுதியுடன் நிற்பதும், அதற்காக தொழிற்சங்கள் மற்றும் சமூக இயக்கங்கள் கூட்டாக செயல்படுவதும் தேவை, என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

இந்தியாவில் உருவாகியுள்ள புதிய தலைமுறை மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கவும், ஆட்குறைப்பைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு அரசுகளை வலியுறுத்துகிறது.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும்:

குழந்தைகள் மீதான வன்முறைகளை விசாரித்திட குழந்தைகள் நீதிமன்றங்களும், பெண்கள் மீதான வன்முறைகளை விசாரித்திட மகளிர் சிறப்பு நீதிமன்றங்களும் மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்படவும், இவ்வழக்குகள் அனைத்தும் ஆறு மாத காலத்திற்குள் நடத்தி முடிக்கப்படவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது.

பள்ளிக்கல்வியில் ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் பாடத்திட்டங்களை கொண்டு வருவதுடன் வளர் இளம் பெண்கள் மத்தியில் பாலியல் விழிப்புணர்வு கல்வியை கற்றுக் கொடுக்கவும், அத்துடன் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து கல்வி நிலையங்களிலும் பாலியல் புகார் கமிட்டி அமைத்திடவும், பணியிடங்களில் இத்தகைய புகார் கமிட்டிகள் அமைக்கப்படுவதையும், ஸ்தல மட்ட புகார் கமிட்டிகள் மாவட்டம் தோறும் அமைக்கப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டுமென்று இம்மாநாடு கோருகிறது.

அதிகரிக்கும் அமில வீச்சை தடுத்து நிறுத்த தமிழக அரசு அமில விற்பனையை முறைப்படுத்திட வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் அமில வீச்சால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உயர் சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்கான முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும்.

வன்முறை வழக்குகளில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 166(எ) சட்டப் பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடவும் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில 21 வது மாநாடு வலியுறுத்துகிறது.

ஊழலை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளை எடுத்திடுக:

உயர்மட்ட ஊழலைப் பொறுத்த வரை, ஆளும் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், பெரு முதலாளிகளின் கூட்டணி இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி சரியாகவே சுட்டிக்காட்டி வருகிறது. இதன் பின்புலமாக நவீன தாராளமயக் கொள்கைகள் பங்கு வகிக்கின்றன என்பது தான் உண்மை. இவற்றுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே ஊழல் ஒழிப்புப் போராட்டத்தைப் பொருத்த வேண்டும்.

மாநிலங்களில் உயர்மட்ட ஊழல்களைத் தடுக்க லோகாயுக்தா அமைப்புகளை ஏற்படுத்துவது; முதலமைச்சர் உட்பட இதன் வரம்புக்குள் கொண்டு வருவது, அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஊழல்களைத் தடுக்க குடிமக்கள் சாசனம் என்ற பெயரில் அனைத்து அரசு துறைகளும் மக்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவெடுப்பதற்கான காலத்தை நிர்ணயித்து, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை சட்டரீதியாக்குவது, தேர்தலில் பண பலத்தின் ஆதிக்கத்தைத் தடுக்க தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள கறுப்புப்பணத்தைக் கைப்பற்றுவதுடன், பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இயற்கை வளங்களை அபரிமிதமான லாபம் பெறும் வகையில் தனியாருக்கு விற்பனை செய்வதைத் தடை செய்வது, ஊழல் தடுப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வருவது போன்ற அரசியல், சட்ட, நிர்வாக நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும்.

மோடி அரசுக்கு கண்டனம்:

பாஜகவின் மோடி அரசு பதவி ஏற்றபின் புதிய ரயில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப் போவதில்லை என்றும், ஏற்கனவே ஒப்புதல் அளித்து நிதி நிலை அறிக்கைகளில் சேர்க்கப்பட்ட திட்டங்களை முடிக்கவே முன்னுரிமை தரப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் பாஜக அரசு இந்த திட்டத்தையும் புதிய திட்டமாக கருதுவதால் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நடைமுறையில் அதுவும் கிடப்பில் போடப்படும்.

சீன அரசு ரயில்வே துறையில் ஆண்டு தோறும் 7 லட்சம் கோடி முதலீடு செய்வதைப்போல மத்திய அரசுதான் ரயில் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். பல லட்சம் கோடி மத்திய அரசுக்கு வர வேண்டிய வருவாயை கார்ப்பரேட்டுகளுக்கு விட்டுக் கொடுக்கும் பாஜக அரசு, காங்கிரஸ் அரசைப் போலவே பணம் இல்லை என்ற காரணத்தைக் கூறி திட்டங்களை தட்டிக் கழிப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய அரசு சாக்கு போக்குகளை கைவிட்டு ரெயில் வளர்ச்சியில் குறிப்பாக தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு வரும் ரெயில்வே நிதி நிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்திட இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. தமிழக அரசும், மாநிலத்தில் நிறைவேற்ற வேண்டிய ரயில்வே திட்டங்களை மத்திய அரசிடம் வலுவாக வற்புறுத்த வேண்டுமென மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தீர்மானங்கள்பெண்கள்குழந்தைகள்வேலைவாய்ப்புஊழல்திட்டங்கள்

You May Like

More From This Category

More From this Author