டீஸ்டாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

டீஸ்டாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை
Updated on
1 min read

நிதி மோசடி வழக்கில், மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாட், அவருடைய கணவர் ஜாவித் ஆனந்த் உள்ளிட்டோரை கைது செய்ய, உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தடை விதித்தது.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தை நிகழ்த்திய மதவாதச் சக்திகளுக்கு எதிராக போராடியவர்களில் ஒருவரான டீஸ்டா செடல்வாட், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பில் செயல்படுபவர்.

டீஸ்டா செடல்வாட், அவருடைய கணவர் ஜாவித் ஆனந்த், முன்னாள் எம்.பி. இஷான் ஜாஃப்ரியின் மகன் தன்வீர் மற்றும் தன்னார்வலர்கள் சலிம்பாய் சந்தி, ஃபைரோஸ் குல்ஸார் ஆகியோர் மீது கடந்த ஜனவரி மாதம் அகமதாபாத் குற்றப் பிரிவு போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

மதக் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் ரூ.1.5 கோடி அளவில் நிதி மோசடி நடந்துள்ளதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில், டீஸ்டா செடல்வாட், அவருடைய கணவர் ஜாவித் ஆனந்த் உள்ளிட்டோருக்கு முன்ஜாமீன் அளிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால், டீஸ்டாவின் மும்பை இல்லத்துக்கு குஜராத் குற்றப் பிரிவு போலீஸ் குழு ஒன்று உடனடியாக விரைந்தது.

இந்த நிலையில், கைது நடவடிக்கைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, டீஸ்டாவின் முன்ஜாமீன் மனுவை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in