

இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட், பயணிகள் நலன் பேணும் வகையிலும், எதிர்கால நலனை உறுதி செய்யும் வகையிலும் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் மோடி கூறும்போது, "தேசத்தின் மிகப் பெரிய பொதுப் போக்குவரத்து அமைப்பான ரயில்வே துறையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி காணும் வகையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்ஜெட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனை பட்ஜெட். ஏனெனில், வெறும் ரயில் அறிவிப்புகள் பற்றி பேசுவதில் இருந்து மாறுபட்டு ரயில்வே துறையின் சீர்த்திருத்தை முன்நிறுத்தி ஒரு முன்னுதாரண மாற்றத்துக்கு இந்த பட்ஜெட் வித்திட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்டில் முதன் முறையாக தொழில்நுட்ப மேம்பாடு, நவீனப்படுத்துதல் தொடர்பாக திடமான தொலைநோக்கு அறிவிப்புகள் வெளியாகியிருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
சாமானிய மக்கள் மீதான அக்கறையுடன் ரயில்வே பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பு, வாடிக்கையாளர் சேவை, ரயில்களின் வேகம் என அனைத்தும் ஒரே இருப்புப் பாதையில் நிறுத்தப்பட்டுள்ள பட்ஜெட் இது" இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.