Published : 13 Feb 2015 01:12 PM
Last Updated : 13 Feb 2015 01:12 PM
காதலர் தினத்தின் கோலாகலங்கள் உலகத்தையே அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கின்றன. காதலர் தினத்தை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்துவிட்டீர்களா? காதல் பரிசுகள் இல்லாமல் காதலர் தினம் முழுமையடைவதில்லை என்ற நிலைமை இப்போது உருவாகிவிட்டது.
பத்து ஆண்டுகளுக்கு முன், காதலர் தினத்தை ஒற்றைச் சிவப்பு ரோஜாவுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடி முடித்துவிடலாம். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது.
காதலர் தினத்தில் காதலருக்கு பரிசுகள் கொடுப்பது ரொம்ப ‘ஸ்பெஷ’லாகப் பார்க்கப்படுகிறது. அதனால், காதலர்கள் காதல் பரிசுகளைத் தேர்ந்தெடுப்பதில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
பரிசுகள் ஏராளம்
இப்போது டிரெண்டில் இருக்கும் காதல் பரிசுகளைச் சொல்ல வேண்டுமானால், வித்தியாசமான வாழ்த்து அட்டைகள், பூங்கொத்துகள், இதய வடிவ சாக்லேட்கள், காதல் தலையணைகள், காதல் டெடிபேர் பொம்மைகள், வண்ணமயமான துணை அலங்காரப் பொருட்கள், கேட்ஜட்கள், நகைகள், ஆடைகள் என ஒரு பெரிய பட்டியலே போடலாம்.
“காதலர் தினத்தில் கொடுக்கும் பரிசு எப்படியிருந்தாலும் ரொம்ப ஸ்பெஷல்தான். மற்ற நாட்களில் கொடுக்கும் பரிசுகளைவிடக் காதலர் தினத்தன்று கொடுக்கும் பரிசுகள், எப்போதும் நினைவில் இருக்கும். நான் என் காதலருக்கு எப்போதும் என்னை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் விதமாக இந்தக் காதலர் தினத்தில் ஒரு மோதிரத்தைப் பரிசளிக்கவிருக்கிறேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மாணவி கல்லூரி பிரியா.
காதலர் தினத்தைப் பொருட்களுடன் கொண்டாடாமல் ஸ்பெஷல் தருணங்களுடன் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஏராளமான வழிகள் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்குக் காதலர் தினத்துக்கு என்றே சிறப்பு பேக்கேஜ்கள் வந்துள்ளன. கேண்டில் லைட் டின்னர், லாங் டிரைவ், போட்டிங் எனக் காதலர் தினத்தில் சாகசப் பயணங்களுக்கும் திட்டமிடலாம்.
“காதலிப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான். காதல் பரிசுப் பொருள்களைக் காதலர் தினத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. காதலர் தினத்தில் பரிசுகள் கொடுத்தால் அது நினைவுகளாக மட்டுமே இருக்கும்.
எனக்கு நினைவுகளைவிட சிறந்த தருணங்களை அளிப்பதுதான் பிடிக்கும். அதனால், நான் என் காதலியைக் காதலர் தினத்தில் அவளுக்குப் பிடித்த பீச்சில் போட்டிங் அழைத்துப்போகலாம் என்று யோசித்திருக்கிறேன்” என்கிறார் கல்லூரி மாணவர் உத்தம்.
காதல் சந்தை
காதலைத் தீர்மானிப்பதில் இந்தப் பரிசுகளுக்கு எந்த அளவுக்குப் பங்கிருக்கிறது என்பதும் பெரிய கேள்விதான். சர்வதேச அளவில் காதலர் தினத்திற்கு என்று ஒரு மாபெரும் சந்தையே சமீபத்தில் உருவாகியிருக்கிறது. ‘காதலை வலிமையாக்கும் காதல் பொருட்கள்’ என்ற வாசகங்களுடன்தான் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் அந்தப் பொருட்களைச் சந்தைப்படுத்துகிறார்கள்.
காதலைச் சந்தைப்படுத்துவதில் இருக்கும் ஆபத்துகளையும் இந்த நேரத்தில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். “காதலை வெளிப்படுத்துவதற்குப் பரிசுப் பொருட்கள் போதுமானதாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பைப் பரிசுப் பொருள்கள் கொடுத்துத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
காதலர் தினம் நிச்சயமாகக் கொண்டாட வேண்டும். ஆனால், அன்று காதலருக்குப் பரிசுப் பொருள் கொடுத்தால்தான் காதலிக்கிறோம் என்று அர்த்தமில்லை. நான் காதலர் தினத்திற்கு என் காதலியை அவருக்குப் பிடித்த இடத்திற்கு அழைத்துப்போகலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ்.
ஆன்லைன் கொண்டாட்டங்கள்
காதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் பல காதலர் தின சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்திருக்கின்றன. அத்துடன் காதலர்களுக்கான புத்தம் புதிதாகப் பல பரிசுகளை அறிமுகப் படுத்தியுள்ளன. கடைக்குச் சென்று பரிசுப் பொருட்கள் வாங்க நேரமில்லாதவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்தக் காதல் பரிசுகளுக்கு ஐம்பது சதவீதம் முதல் எழுபது சதவீதம்வரை தள்ளுபடியும் உண்டு.
உங்கள் காதலரின் மனநிலைக்கு ஏற்ற பரிசுகளை அளிக்கும் வாய்ப்புகளை இந்த இணையதளங்கள் எளிமையாக்குகின்றன. உதாரணமாக, உங்கள் காதலர் இசைப் பிரியர் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி, இசை சம்பந்தமான பரிசுப் பொருட்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள். இதே மாதிரி, ஒவ்வொருவரின் மனதுக்குப் பிடித்த மாதிரியான பொருட்களைக் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தத் தளங்களில் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.
காதலர் தினத்தைப் பரிசுகளுடனும், பரிசுகள் இல்லாமலும் கொண்டாடுவதும் அவரவர் விருப்பம். ஆனால், உலகம் முழுவதும் காதலர் தினம் தரும் உற்சாகத்தை வேறு எந்தத் தினமும் காதலர்களுக்குத் தருவதில்லை.