காஷ்மீரில் மஜக - பாஜக கூட்டணி ஆட்சி: முப்தி முகமது சயீது நாளை முதல்வராகப் பதவியேற்பு - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்

காஷ்மீரில் மஜக - பாஜக கூட்டணி ஆட்சி: முப்தி முகமது சயீது நாளை முதல்வராகப் பதவியேற்பு - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் நீண்ட இழுபறிக்குப் பின்னர், மக்கள் ஜனநாயக கட்சி பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி உறுதியாகி உள்ளது. மஜக தலைவர் முப்தி முகமது சயீது நாளை முதல்வராகப் பதவியேற்கிறார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

காஷ்மீரில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் 23-ம் தேதி வெளியாயின. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 87 இடங்களில் மக்கள் ஜனநாயக கட்சி (மஜக) 28, பாஜக 25, தேசிய மாநாட்டுக் கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றிப் பெற்றன. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் மஜக ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டுக் கட்சியும் காங்கிரஸும் ஆதரவு அளிக்க முன்வந்தன. அதை மஜக நிராகரித்து விட்டது.

இதற்கிடையில் மஜக - பாஜக கூட்டணி அரசு அமைக்க இருதரப் பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. எனினும் கருத்து வேறு பாடுகள் காரணமாக இழுபறி நிலவியது. இந்நிலையில் மஜக விதித்த நிபந்தனைகளைப் பாஜக ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படு கிறது. இதையடுத்து, மஜக தலைவர் முப்தி முகமது சயீது தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதியானது.

அதன்படி காஷ்மீர் முதல்வராக முப்தி முகமது சயீது (79) நாளை பதவியேற்கிறார். ஜம்முவில் நடக்கும் விழாவில் அவருடன் 24 அமைச்சர்களும் பதவியேற் கின்றனர். இவர்களில் 12 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். துணை முதல்வர் பதவி பாஜக.வுக்கு வழங்கப்படுகிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள 370 சிறப்பு பிரிவை நீக்க கூடாது, ராணுவத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தைப் படிப்படி யாக விலக்கி கொள்ளுதல் போன்ற முக்கியப் பிரச்சினைகளில் மஜக விதித்த நிபந்தனைகளைப் பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை முப்தி முகமது சயீது சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பின் போது, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு மோடிக்கு முப்தி அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட மோடி, நாளை நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். காஷ்மீரில் பாஜக முதல் முறையாக ஆட்சியில் பங்கேற்க உள்ளது.

பிரதமரைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த முப்தி, ‘‘பதவியேற்பு விழா முடிந்தவுடன் பிற்பகல் 3 மணிக்கு குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டம் அறிவிக்கப்படும்’’ என்றார்.

கடந்த 2002 முதல்வர் 2005-ம் ஆண்டு வரை காஷ்மீர் முதல்வராக முப்தி பதவி வகித்தார். அதன்பின் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் முதல்வர் பதவியேற்க உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in