

மத்திய அரசு `நிதி ஆயோக்' அமைப்பு மூலம் தீட்டும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஆகியவை பனிமூட்டம் போல, தெளிவாகத் தெரிவதில்லை, என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மாநில அரசுகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும். மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட கடனை மத்திய அரசு எங்கள் மீது சுமத்துகிறது. அந்தக் கடன் விவரங்களை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், மத்திய அரசுக்கு எதிராக புதுடெல்லியில் போராட்டம் நடத்துவோம்.
மத்திய அரசு திட்டக் குழுவை ஒழித்துவிட்டது. அதற்கு எங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். அந்தக் குழுவை நிர்மாணித்தது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.
அது நேதாஜியின் கனவு. அந்தக் குழுவை ஒழிப்பது என்பது நேதாஜியை அவமானப்படுத்துவது போலாகும். திட்டக் குழுவை ஒழிக்கும் விஷயத்தில் நேதாஜியை அவமானப்படுத்துபவர்கள், எவ்வாறு நேதாஜியை மதிக்கும் என்னைப் போன்றவர்கள் அதில் ஈடுபட எதிர்பார்க்கலாம்?
மத்திய அரசு வளர்ச்சி குறித்துப் பேசுகிறது. ஆனால் அதில் நிலையான தன்மை இல்லை. எல்லாமே பனிமூட்டம் போல மந்தமாக உள்ளன. மத்திய அரசுக்கு எங்கிருந்து நிதி வரும், அவற்றை மாநில அரசுகளுக்கு எவ்வாறு மத்திய அரசு பிரித்துக் கொடுக்கும் என்பன போன்றவற்றை ஆராய வேண்டியுள்ளது.
'நிதி ஆயோக்' அமைப்புக்கு எதிராக நாங்கள் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்தோம். ஆனால் ஒன்றுகூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று முன்தினம் நடந்த `நிதி ஆயோக்' கூட்டத்திலும், அதனைத் தொடர்ந்த முதல் வர்கள் கூட்டத்திலும் மேற்கு வங்கம் கலந்துகொள்ள வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.