

பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சியில் நேற்று விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்ட போது இரு விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
66 வயதான கேப்டனின் சாதுர் யமான செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் நேற்று செக் குடியரசை சேர்ந்த ‘ரெட் புல்' நிறுவனத்தின் 4 சிறிய ரக விமானங்கள் வானில் ‘ஏரோபோட்டிக்ஸ்' சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டன. 4 விமானங்களும் வானில் வட்டமிட்டு வெண் புகையை கக்கிக்கொண்டு ஒன்றையொன்று மோதுவது போல சென்று பிரியும் சாகசத்தை அரங்கேற்றின. இதனை பார்வையாளர்கள் மிகவும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் திடீரென உரசிக் கொண்டன. இதனால் பெரும் சத்தம் ஏற்பட்டது. இதனால் பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மோதிய விமானங்கள் நிலை குலைந்து தடுமாறின. எனினும் விமானிகள் அவற்றை கட்டுப்படுத்தி அவசரமாக தரை யிறக்க முயற்சித்தனர். சுமார் 5 நிமிட நீடித்த பரபரப்புக்குப் பின் இரு விமானங்களும் பத்திரமாக தரையிறக்கப்பட்டன. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்களும், பார்வையாளர்களும் நிம்மதியடைந்தனர்.
இந்த விபத்து குறித்து ஏரோ இந்தியா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசிய போது, ‘‘விபத்துக்குள்ளான செக் குடியரசின் விமானத்தில் 66 வயதான ராத்கா மெக்காவோ கேப்டனாக இருந்தார். இறக்கைகள் மோதிக் கொண்ட தால் பதற்றமடையாமல், உடனடி யாக மற்ற விமானத்தின் கேப்டனுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். அவருடைய சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தின் இறக்கைகள் மட்டும் சேதமடைந் துள்ளன. இருப்பினும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றனர்.
இந்த சம்பவத்தால் விமான சாகச நிகழ்ச்சிகள் சுமார் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.