

பிஹார் சட்டப்பேரவையில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) கட்சிக்கு முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தை சபாநாயகர் நேற்று வழங்கினார். இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பிஹார் மாநிலத்தில் ஐஜத கட்சி மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் பதவி விலகினார். அவருக்குப் பதில் ஜிதன் ராம் மாஞ்சி முதல்வராக்கப்பட்டார். இருவருக்கும் கருத்து வேறு பாடுகள் எழுந்ததை அடுத்து, மாஞ்சியை கட்சியிலிருந்து நீக்கினர். அவர் கட்சி சாரா உறுப்பினர் என்று அறிவிக்கப்பட் டுள்ளார்.
இதையடுத்து, கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக மீண்டும் நிதிஷ் குமார் தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்நிலையில் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்த மாஞ்சி, சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
இந்தப் பரபரப்பான சூழ் நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐஜத கட்சிக்கு சட்டப்பேரவையில் முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தை வழங்கி சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி நேற்று உத்தரவிட்டார். இதுவரை எதிர்க்கட்சியாக இருந்த பாஜக அந்த அந்தஸ்தை இழந்துள்ளது. இதுகுறித்து சபாநாயகர் கூறும்போது, “இதுவரை எதிர்க்கட்சித் தலை வராக பாஜகவைச் சேர்ந்த நந்த கிஷோர் யாதவ் இருந்தார். இப்போது உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில், ஐஜத.வைச் சேர்ந்த விஜய் சவுத்ரி எதிர்க்கட்சித் தலை வராக அங்கீகரிக்கப்படுகிறார்” என்றார்.
சபாநாயகர் மேலும் கூறும் போது, “உறுப்பினர்கள் எண்ணிக் கையின் அடிப்படையில்தான் சட்டப்பேரவை செயலகம் செயல்பட முடியும். அதிக உறுப்பினர்கள் பலம் இருப்பதால் தங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐஜத கட்சியினர் கேட்டனர். அதை மறுக்க முடியாது” என்றார்.
அதேபோல் மேலவையிலும் ஐஜத.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவராக நிதிஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று மேலவை தலைவர் அவதேஷ் நாராயண் சிங் நேற்று கூறினார். இந்நிலையில், சபாநாயகரின் நடவடிக்கையைக் கண்டித்து சட்டப்பேரவை நுழைவு வாயிலில் பாஜக உறுப்பினர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பிஹார் சட்டப்பேரவையில் 243 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் சபாநாயகர் உட் பட ஐஜத 110, பாஜக 87, ராஷ்டிரிய ஜனதா தளம் 24, காங்கிரஸ் 5, சுயேச்சைகள் 5, இந்திய கம்யூனிஸ்ட் 1 மற்றும் கட்சி சாரா உறுப்பினர் ஒருவர் (மாஞ்சி) உள்ளனர். 10 இடங்கள் காலியாக உள்ளன.