Last Updated : 08 Feb, 2015 09:28 AM

 

Published : 08 Feb 2015 09:28 AM
Last Updated : 08 Feb 2015 09:28 AM

டெல்லி தேர்தலில் 67 சதவீத வாக்குப்பதிவு: கடந்த தேர்தலைவிட ஒரு சதவீதம் அதிகம்

டெல்லி சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2013 தேர்தலில் பதிவானதை விட ஒரு சதவீதம் அதிகம் ஆகும்.

வாக்குப்பதிவு முடியும் நேரமான 6 மணிக்குப் பிறகும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடுவே, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 64 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி, மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ வர்தன், மேனகா காந்தி, டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் காலையிலேயே வாக்களித்தனர்.

மொத்தம் 70 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 1.33 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 1.5 லட்சம் பேர் முதன்முறை வாக்காளர்கள். 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இந்தத் தேர்தலை பிரதமர் நரேந்திர மோடியின் 8 மாத ஆட்சியை மதிப்பீடு செய்வதற்கான வாய்ப்பாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேநேரம், இது டெல்லிக்கான தேர்தலே தவிர, நாடு முழுவதுக்குமான தேர்தல் அல்ல என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

பாஜகவைப் பொருத்தவரை இது மிகவும் முக்கியமான தேர்தல். பிஹார் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் பாஜகவுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதேநேரம் தோல்வி ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு

டெல்லி தேர்தலில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், பல வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதையடுத்து, 6 மணிக்கு முன்பாக வரிசையில் நின்ற அனைவரும் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வாக்கு சதவீதம் அதிகரிப்பு

கடந்த 3 முறையாக வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 57.58 சதவீத வாக்குகள் பதிவானது. இது 2013-ல் 66 சதவீத மாகவும், தற்போது 67 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x