

பாஜகவின் டெல்லி தேர்தல் தோல்வியை சிவசேனா காட்டமாக விமர்சித்ததை தொடர்ந்து, மகாராஷ்டிர நவநிர்மான் சேனாவின் (எம்என்எஸ்) தலைவர் ராஜ்தாக்கரே கேலிச்சித்திரம் மூலம் விமர்சனம் செய்துள்ளார்.
அரசியல் கார்ட்டூனிஸ்ட் ஆன ராஜ்தாக்கரே டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து கேலிச்சித்திரம் வரைந்துள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் இரட்டை கோபுர கட்டிடங்கள் போல் ஒருவர் பின் ஒருவராக நிற்கின்றனர். இந்த கட்டிடங்களை ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் விமானம் மூலம் தகர்த்துக் கொண்டு வெளியே வருவது போலவும் இந்தக் காட்சியை டி.வி.யில் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருப்பது போலவும் உள்ளது.
மேலும் ஒபாமாவின் இந்தியப் பயணத்தை மோடி, டெல்லியில் தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தியது பற்றிய பத்திரிகை செய்தியும் அந்த கேலிச்சித்திரத்தில் உள்ளது.