Last Updated : 02 Feb, 2015 04:29 PM

 

Published : 02 Feb 2015 04:29 PM
Last Updated : 02 Feb 2015 04:29 PM

கேஜ்ரிவால் சமூகத்தை விமர்சித்து போஸ்டர்: பாஜக மீது தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க அர்விந்த் முடிவு

டெல்லி தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பிரச்சார விளம்பரத்தில், தன்னுடைய சமூகத்தை குறிவைத்து விமர்சனம் செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அர்விந்த் கேஜ்ரிவால் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, "என் மீதான விமர்சனத்தை பாஜகவினர் என்னிடம் நேரடியாக தெரிவிக்கலாம். கடந்த சில நாட்களாக என்னை விமர்சிக்கும் விளம்பரங்களை அவர்கள் வெளியிட்டு வருகின்றனர். எனது குழந்தைகளையும் அவர்கள் அவதூறாக பேசுகின்றனர்.

நம்மை யாராவது விமர்சனம் செய்தால், அதனை கண்டு பொறுமையாக இருப்பதே நாம் அவர்களுக்கு அளிக்கக் கூடிய உரிய பதில் என்று அன்னா ஹசாரே என்னிடம் கூறுவார். இதுவரை அப்படிதான் நான் பொறுமையாக இருந்தேன்.

ஆனால், தற்போது அவர்கள் தங்களது எல்லையை தாண்டிவிட்டனர். 'கேஜ்ரிவால்' சமூகத்தினருக்கு தொந்தரவு செய்வதுதான் வேலை என்று விமர்சித்து அவர்கள் விளம்பரம் அளித்துள்ளனர்.

என்னை அவர்கள் எந்த வகையிலும் விமர்சிக்கலாம். ஆனால் எனது சமூகத்தை தாக்கிப் பேசுவது தவறு. டெல்லி மக்கள் இதுபோன்ற இனவெறி அரசியலில் ஈடுபடுபவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்" என்றார்.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர், கேஜ்ரிவால் சமூகத்திடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தினமும் 5 கேள்விகளை பாஜக எழுப்பி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று இடம்பெற்ற பாஜக பிரச்சார விளம்பரத்தில், "கடந்த வருடம் டெல்லியில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து குடியரசு தின அணிவகுப்பின்போது முற்றுகை போராட்டம் செய்வதாக மிரட்டல் விடுத்தார்கள். ஆனால் இந்த முறை குடியரசு தின விழாவுக்கு வி.ஐ.பி. அழைப்பு வரவில்லை என்று கண்ணீர் வடிக்கின்றனர்.

குடியரசு தினவிழா அணிவகுப்பைக் காண லட்சக்கணக்கானவர்கள் தேச பக்தியுடன் பங்கேற்க பெருமை கொள்வார்கள். ஆனால் உங்கள் (கோத்திரம்) சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எப்போதுமே தொந்தரவு செய்யத்தான் தெரியும்" என்ற வாசகம் இடம்பெற்றது.

முன்னதாக வெள்ளிக்கிழமை பாஜக-வின் பிரச்சார விளம்பரத்தில், அன்னா ஹசாரேவின் படத்துக்கு மாலை அணிவித்தப்படியான கேலி சித்திரத்தை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சியின் கண்டனத்துக்குள்ளானது நினைவுக்கூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x