

'எனது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர்கள் நலனுக்காகவே நான் பதவியை ராஜினாமா செய்தேன்' என்று பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியின் முதன்மைச் செயலர் பிரஜேஷ் மெஹ்ரோத்ரா சந்தித்த மாஞ்சி தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
பின்னர் பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் மாஞ்சி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "பிஹார் சட்டப்பேரவை மரபை சபாநாயகர் பின்பற்றவில்லை. அவரது நடுநிலைமையை நான் சந்தேகிக்கிறேன்.
எனக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள்., அமைச்சர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். எனக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன.
எனக்கு ஆதரவு தெரிவிக்க 140 எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருந்தனர். அவர்களுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வந்தது. எனது ஆதரவாளர்கள் நலனுக்காகவே நான் ராஜினாமா செய்தேன்.
இப்போதுகூட எனக்கு நம்பிக்கை இருக்கிறது பேரவையில் பெரும்பான்மையை என்னால் நிரூபித்திருக்க முடியும் என்று. பிஹார் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தல் நடத்துவதே ஒரே தீர்வாகும்" என்றார்.