Last Updated : 17 Feb, 2015 10:30 AM

 

Published : 17 Feb 2015 10:30 AM
Last Updated : 17 Feb 2015 10:30 AM

சமத்துவம் மறுக்கும் சவுதி அரேபியா- 1

சவுதி அரேபியாவில் நடைபெறுவதாக ஒரு கதையைத் தான் எழுதியிருப்பதாக ஒருவர் கூறுகிறார். அந்தக் கதையின் தொடக்கம் இது. கதாசிரியரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?

“காரை ஓட்டிச் சென்ற ஜாஸ்மின் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த தன் நண்பனைக் கண்டதும் காரை நிறுத்தினாள். அவளை அடையாளம் கண்டு கொண்ட அந்த நண்பனும் சற்றுத் தொலைவிலிருந்தே தன் கையை அசைத்தான். ஜாஸ்மின் காரை விட்டு இறங்கினாள். “எங்கே இந்தப் பக்கம்?” என்றான் அவன். “நதிக்கரையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாம் என்று கிளம்பினேன்.” என்றாள் ஜாஸ்மின். ‘’அப்படியா? நான் ஒரு சினிமாவுக்குப் போகலாம் என்று கிளம்பினேன்” என்றான் அவள் நண்பன். அவள் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டாள் - அவளுக்குத் தெரியும், அவன் மதுவகத்துக்குத்தான் கிளம்பி இருப்பான் என்று.”

இப்படி எழுதியவர் நிச்சயம் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருக்கமாட்டார். அது மட்டுமல்ல, அந்த நாட்டைப் பற்றிய அடிப்படை விவரங்கள்கூட அவருக்குத் தெரியவில்லை என்பதையும் உறுதியாகக் கூறிவிடலாம். காரணங்களை அடுக்குவோமா?

சவுதி அரேபியாவில் பெண்கள் தனியாக கார் ஓட்ட அனுமதியில்லை. சற்றுத் தொலைவிலிருந்து ஜாஸ்மினின் நண்பன் அவளை அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பு இல்லை. கண்களைத் தவிர உடல் முழுவதும் மறைக்கும் உடையைத்தான் அங்கு பெண்கள் அணியவேண்டும். சவுதி அரேபியாவில் நதிகள் கிடையாது. உறவினர்களைத்தவிர வேறு யாருடனும் பொது இடங்களில் பெண்கள் பேசக் கூடாது. அந்த நாட்டில் திரை அரங்குகளே கிடையாது.

(விதிவிலக்குகளைப் பிறகு பார்ப்போம்)

மதுவகமா? வாய்ப்பே இல்லை. ஆக, பல விதங்களில் சவுதி அரேபியா மிக மிக வித்தியாசமான ஒரு நாடுதான். ஆண்-பெண் சமத்துவம் கிடையாது. முஸ்லிம்கள்-அல்லாதவர்கள் சமத்துவம் கிடையாது. ஜனநாயகமோ, எந்த வகையான தேர்தலோ கிடையாது என்பதால் ஆட்சியாளர்-மக்கள் சமத்துவம் கிடையாது. சட்டத்திலும் சமத்துவம் கிடையாது. இப்படிப் பலவிதங்களில் தனித்துவம் காட்டி வருகிறது சவுதி அரேபியா.

சவுதி அரேபியா எங்கே இருக்கிறது? இந்தியாவிலிருந்து வட மேற்கே பாகிஸ்தான். அதைத் தொடர்ந்து கத்தார், குவைத், இராக் என்று போனால் அரேபிய தீபகற்பம் வரும். இந்த அரேபிய தீபகற்பத்தின் மிகப் பெரும்பாலான பகுதியைக் கொண்டுள்ளது சவுதி அரேபியா. அதற்குக் கீழே ஏமன், ஓமன் என்று இரண்டு குட்டி நாடுகள். ஆப்பிரிக்காவுக்கு வடகிழக்காக உள்ளது சவுதி அரேபியா. அல்ஜீரியாவை விட்டுவிட்டால் அரபு நாடுகளில் மிகப் பெரியது சவுதி அரேபியாதான். அத்தனை பக்கங்களிலும் அரபு நாடுகளால் சூழப்பட்டுள்ளது சவுதி அரேபியா.

வட எல்லையில் ஜோர்டான் மற்றும் இராக், வடகிழக்கில் குவைத், கிழக்கில் கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்கள், தென்கிழக்கில் ஓமன், தெற்கில் ஏமன். சவுதி அரேபியா என்றவுடனேயே நம் மனதில் படர்ந்த பாலைவனம் நினைவுக்கு வரும். உண்மைதான். அந்த நாட்டில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மணல் பாங்கானதுதான். அந்த நாட்டின் மீது சமீபத்தில் ஒரு பெரும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அது அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பானது.

அமெரிக்காவில் நடந்த இரட்டை வணிக கோபுர தாக்குதல் தீவிரவாதிகளின் உச்சகட்ட அராஜகங்களில் ஒன்று. இரண்டு விமானங்கள் அந்த கோபுரங்கள் மீது மோத, மூன்றாவது விமானம் வாஷிங்டனுக்குச் சற்று வெளியே உள்ள அமெரிக்க ராணுவ அமைப்பான பென்டகனில் மோதியது. 9/11 (செப்டம்பர் 11) தாக்குதல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் தாக்குதலில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் சமீபத்தில் புறப்பட்டிருக்கிறது புதிய பூதம். அது இந்தத் தாக்குதலில் சவுதி அரேபியாவுக்கும் தொடர்பு உண்டு என்கிறது – அதுவும் சவுதி அரச குடும்பத்தினரின் நேரடித் தொடர்பாம்.

இப்படிக் கூறி இருப்பவர் சகாரியாஸ் மவ்சாய். இரட்டை கோபுரத் தாக்குதலுக்காக அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அல் காய்தா தீவிரவாதி. இந்தத் தாக்குதலுக்காக நிதி உதவி செய்ததாக சவுதி அரச வம்சத்தினர் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களெல்லாம் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள்.

கைதியின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டா?

அல் காய்தாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் உள்ள உறவு ஒரு விதத்தில் நகமும் சதையும் போல. மறு புறம் பூனையும் எலியும் போல. அல் காய்தாவையும் ஒசாமா பின் லேடனையும் இணைப்பது பல இழைகள். SBG (அதாவது சவுதி பின் லேடன் குழுமம்) என்ற நிறுவனம்தான் சவுதியின் மிகப் பெரிய ஒப்பந்த நிறுவனம் (contracting company) என்பதை மட்டும் இப்போது அறிந்து கொள்ளலாம். மற்றவற்றை சற்றுப் பொறுத்து விவரமாகப் பார்ப்போமே.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x