ஆவணங்கள் திருட்டு வழக்கில் யாரும் தப்ப முடியாது: ராஜ்நாத்

ஆவணங்கள் திருட்டு வழக்கில் யாரும் தப்ப முடியாது: ராஜ்நாத்
Updated on
1 min read

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்டு வெளியிடப்பட்ட விவகாரத்தில் யாரும் தப்ப முடியாது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், "மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்டு வெளியிடப்பட்ட விவகாரத்தில் யாரும் தப்ப முடியாது. குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

டெல்லி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் உண்மை தெளிவாக தெரியவரும்.

இந்த குற்றம் வெகு நாட்களாகவே நடந்து வந்திருக்கிறது. இப்போது அம்பலமாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இக்குற்றச் செயலை அம்பலப்படுத்தியதில் மகிழ்ச்சியே. எங்கள் அரசு விழிப்புடன் இருந்திருக்காவிட்டால், இது வெளிச்சத்துக்கு வந்திருக்காது" என்றார்.

பெட்ரோலியத்துறை ரகசிய ஆவணங்களை, பணம் வாங்கிக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்ததாகக் கூறி, பெட்ரோலிய அமைச்சக ஊழியர்கள் 2 பேர் உட்பட 12 பேரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம், எந்தெந்த நிறுவனங்களுக்கு ரகசிய ஆவணங்களை விற்றார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ரகசிய ஆவணங்கள் திருட்டுப் போவதைக் கண்டறிய போலியான ரகசிய ஆவணங்களை டெல்லி போலீஸார் உருவாக்கி வைத்துள்ளனர். அவற்றைத் திருடி விற்க முயன்ற போது 5 பேரும் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது. எண்ணெய் துரப்பணக் கொள்கை தொடர்பான ஆவணங்களை அவர்கள் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in