Published : 14 Feb 2015 01:36 PM
Last Updated : 14 Feb 2015 01:36 PM

அடுத்த 5 ஆண்டுகளுக்கு டெல்லி மக்களுக்கு சேவை செய்வேன்: முதல்வர் கேஜ்ரிவாலின் முதல் உரை

டெல்லி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால், அடுத்து 5 ஆண்டுகளுக்கு டெல்லி மக்களுக்காக நான் சேவையாற்றுவேன் என்றார்.

கடந்த முறை வெறும் 49 நாட்களில் ஆம் ஆத்மி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளானது ஆம் ஆத்மி கட்சி. இந்நிலையில், டெல்லி தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதலே, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செலுத்துவேன் என கேஜ்ரிவால் கூறிவந்தார்.

பதவியேற்பு விழாவுக்குப் பின்னர், ராம் லீலா மைதானத்தில் பேசிய கேஜ்ரிவால்: அடுத்த 5 ஆண்டுகள் டெல்லி மக்களுக்காக நான் சேவை செய்வேன். டெல்லி மக்கள் என்னை நேசித்தார்கள் என அறிவேன். ஆனால், இவ்வளவு தூரம் என்னை நேசிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. 70-க்கு 67 என்ற வெற்றி மிகப் பெரிய வெற்றி. வாக்கு மழையில் எங்களை மக்கள் நனைய வைத்திருக்கின்றனர். இது ஒரு அற்புதம். இதன் மூலம் இறைவன் எங்களுக்கு ஏதோ ஒரு சேதி சொல்லியிருக்கிறார். நாங்கள் ஆண்டவன் கட்டளையை நிறைவேற்றும் ஊடாக இருப்போம். ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எதேச்சதிகார அரசியலுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வது மிகவும் அவசியம்" என்றார்.

ஊழல் இல்லாத முதல் மாநிலம்:

டெல்லியை ஊழல் இல்லாத முதல் மாநிலமாக உருவாக்குவேன் என அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் பேசும்போது, "கடந்த முறை நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதும் டெல்லியை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தோம். அப்போது லட்சியம் மட்டுமே இருந்தது. இப்போது எங்களுக்குத் தெரியும், டெல்லியை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவது எப்படி என்பது தெரியும்" என்றார்.

கட்சி பேதமின்றி நடவடிக்கை

டெல்லியில் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் எந்தக் கட்சி தொப்பியை தலையில் தாங்கியிருந்தாலும் சரி, கட்சி பேதமின்றி நடவடிக்கை பாயும் என டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, "கடந்த டிசம்பர் 28-ம் தேதி நான் கூறியதையே இன்று மீண்டும் தெரிவிக்கிறேன். யாராவது லஞ்சம் கேட்டால் மறுக்காமல், லஞ்சம் கொடுங்கள். அதை அப்படியே உங்கள் மொபைலில் போட்டோ பிடித்துக் கொள்ளுங்கள். நாங்கள் அதன் மீது நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

ஊடகங்களுக்கு வேண்டுகோள்:

ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் 5 ஆண்டுகள் அளித்துள்ளனர். எனவே ஆட்சிப் பொறுப்பேற்ற சில மணி நேரங்களிலேயே எங்களை கணிக்க ஆரம்பித்துவிடாதீர்கள். எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என அர்விந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்தார்.

'மாநில அந்தஸ்துக்கான காலம் வந்துவிட்டது'

"பிரதமரை சந்தித்தபோது, டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வலியுறுத்தியிருக்கிறேன். மத்திய அரசிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு வேண்டுமென பிரதமரிடம் வேண்டியுள்ளேன். ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை இருக்கிறது. இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து பெறும் காலம் வந்துவிட்டது" என கேஜ்ரிவால் தெரிவித்தார்.

'நான் மக்களின் முதல்வர்'

கேஜ்ரிவால் பேசுகையில், "ஆம் ஆத்மியின் அரசு அனைவருக்குமான அரசு. நீங்கள் வாக்கு அளித்திருந்தாலும், அளிக்காவிட்டாலும் நான் அனைவருக்குமான முதல்வன், மக்களின் முதல்வர். தவறாமல் வரி செலுத்துங்கள். உங்கள் வரிப் பணத்தை நான் நற்காரியங்களுக்கு பயன்படுத்துவேன்" என்றார்.

கிரண் பேடி எனது சகோதரி

கிரண் பேடி எனது சகோதரி. டெல்லியில் ஆட்சியை செலுத்துவதில் அஜய் மக்கானின் அறிவுரையையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம். நல்லவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் சரி பாஜகவில் இருந்தாலும் சரி அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம் என கேஜ்ரிவால் பேசினார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார். இறுதியாக ஒரு பக்திப்பாடல் பாடி கேஜ்ரிவால் தனது உரையை நிறைவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x