

மேற்கு வங்கத்தின் மால்டாவில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர் தனது துப்பாக்கியால் சக வீரரை சுட்டுக் கொன்றதாக தெரியவந்துள்ளது. இதில் மேலும் 4 வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஃபராகாவில் எல்லை பாதுகாப்புப் படை முகாமில் வீரர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியுள்ளது. அப்போது திடீரென பகத் சிங் என்ற வீரர் மற்றொரு வீரரை தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதில் மூல்சந்த் என்ற வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனிருந்த கமால் பாஷா, எஸ்.கே. பிரபாகர், சுரேந்தர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பகத் சிங் என்பவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார். துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பகத் சிங்கை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.