Last Updated : 26 Feb, 2015 08:26 AM

 

Published : 26 Feb 2015 08:26 AM
Last Updated : 26 Feb 2015 08:26 AM

தேர்வு வாரிய முறைகேடு புகார்: மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் ராஜினாமா - மோசடி செய்ததாக எப்.ஐ.ஆர். பதிவு

மத்தியப் பிரதேச தொழில் வல்லுநர் தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டதையடுத்து, பதவி விலகுமாறு அம்மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவுக்கு (88) மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மத்தியப் பிரதேச தொழில் வல்லுநர் தேர்வு வாரியத்தின் சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. 5 மாணவர்களுக்கு வனக்காவலர் பணியிடம் ஒதுக்கித் தருமாறு தேர்வு வாரியத்துக்கு, ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தேர்வில் வெற்றி பெறுவதற்காக சிலர் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. பணம் கொடுத்தும் வேலை கிடைக்காத பலர், அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்வில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நடந்த மோசடி குறித்து உண்மை கண்டறிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது ஆளுநருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பான வழக்கில் உயர் பதவியில் வகிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணைக் குழுவுக்குத் தடையில்லை என்று ம.பி. உயர் நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டது. அதன்பின், ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் மீது நேற்றுமுன்தினம் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 420-வது (மோசடி) பிரிவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆளுநர் பதவி யில் இருந்து உடனடியாக ராஜி னாமா செய்யுமாறு ராம் நரேஷ் யாதவுக்கு மத்திய உள் துறை அமைச்சகம் நேற்று உத்தர விட்டது. மேலும், தேர்வில் நடந்த முறைகேடுகள், அதில் சம்பந்தப் பட்டவர்கள், எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து முழு அறிக்கை அளிக்கும்படி மாநில அரசையும், ஆளுநர் மாளிகையையும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து ராம் நரேஷ் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x