

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்ததுபோல பாஜக சார்பில் வெளியாகி உள்ள விளம்பரத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேஜ்ரிவால் ட்விட்டரில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதன் விவரம்:
கடந்த 1948-ம் ஆண்டு இதே நாளில் நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியைக் கொன்றார். இந்த விளம்பரத்தின் மூலம் அதே நாளில் அண்ணா ஹசாரேவை பாஜக கொன்றுவிட்டது.
தீய சக்திகள் உங்கள் (ஆம் ஆத்மி ஆதரவாளர்கள்) கவனத்தை திசைதிருப்ப முயலக் கூடும். ஆனால் நீங்கள் அதற்கு பலிகடா ஆகிவிடக்கூடாது. டெல்லியை முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்கும். எனவே, டெல்லி மக்களுக்கு சேவை செய்ய வும் பெண்களுக்கு பாதுகாப்பான பகுதியாக டெல்லியை மாற்றவும் அனைவரும் தயாராகுங்கள்.
அண்ணா ஹசாரே நலமாக வாழ நான் எப்போதும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கேஜ்ரிவாலை ட்விட்டரில் 33.9 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் இவர்கள் கேஜ்ரிவால் கருத்துகளை உடனுக்குடன் மறுபதிவேற்றம் செய்துவிடுகின்றனர்.
நேற்றைய நாளிதழ் ஒன்றில் கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக சார்பில் ஒரு விளம்பரம் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள கார்ட்டூனில் கேஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறமாட்டேன் என உறுதி கூறுவது போலவும், அதேநேரம் அவர் காங்கிரஸை திருமணம் செய்துகொள்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அண்ணா ஹசாரே போன்ற உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது