

தமிழகத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன்(55) இதுவரை 158 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். 159-வது முறையாக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சாதனைக்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறும் பத்மராஜன், வடோதரா தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார். அடிப்படையில் ஹோமியோபதி மருத்துவரான பத்மராஜன், அதிகமுறை தேர்தலில் போட்டியிட்டவர் என்ற உலக சாதனை படைப்பதற்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறார்.
இது தொடர்பாக பத்மராஜன் கூறுகையில், “இதுவரை 158 தேர்தல்களில் போட்டியிட் டிருக்கிறேன். எனக்கென்று அரசியல் கொள்கை இல்லை. ஆகவே பிரச்சாரமும் செய்வதில்லை. வெற்றி பெறுவது நோக்கமல்ல. சாதனை படைப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன். பிரபலமான தலைவர்களுக்கு எதிராக போட்டியிடுவதை விரும்புகிறேன். அடல் பிஹாரி வாஜ்பாய், ஏ.பி.ஜே. அப்துல்கலாம், பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு எதிராகப் போட்டியிட்டுள்ளேன். 1988 முதல் தேர்தலில் போட்டியிடுகிறேன். கடந்த 2011 தமிழகத் தின் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு 6,273 வாக்குகள் வாங்கியதுதான் இதுவரை நான் வாங்கிய வாக்குகளில் அதிகமாகும்” என்றார்.
சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமின்றி, மாநிலங்களவை, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர் தேர்தல்களையும் இவர் விட்டுவைத்ததில்லை. வேட்புமனு தாக்கலுக்காக மட்டும் இதுவரை ரூ. 12 லட்சம் செலவிட்டுள்ளார்.