Published : 29 Jan 2015 10:38 AM
Last Updated : 29 Jan 2015 10:38 AM

சீனாவுடனான எல்லை பிரச்சினைகளை நேர்மையான முறையில் தீர்க்க விருப்பம்: பேச்சுவார்த்தைக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு

‘‘சீனாவுடனான எல்லை பிரச்சினை களை நேர்மையான முறையில் சுமூகமாக முடித்துக்கொள்ளவே இந்தியா விரும்புகிறது. எனவே, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சீனா முன்வர வேண்டும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் அழைப்பு விடுத்துள்ளார்.

கான்பூரில் இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாமை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

சீனாவுடனான எல்லை பிரச்சினைகளை நேர்மையான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பமாக உள்ளது. சீனா - இந்தியா எல்லை விஷயத்தில் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதுதான் எல்லை என்று ஒரு இடத்தை சீனா குறிப்பிடுகிறது. இல்லை இல்லை.. இதுதான் எல்லை என்று நாம் சொல்கிறோம். இந்தப் பிரச்சினைக்கு சுமூக மான தீர்வு காண இந்தியா தயாராகவே இருக்கிறது. எனவே, சீனாவும் பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும்.

மற்ற நாட்டுப் பகுதிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவுக்கு கிடையாது. இந்திய வரலாற்றைப் பார்த்தால் தெரியும், இந்தியா எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்தது இல்லை. எந்த நாட்டின் பகுதிக்குள்ளும் ஊடுருவியது இல்லை. அமைதியை விரும்புபவர்கள்தான் இந்தியர்கள். இதை சீனா புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் இந்தியா வந்து சென்றுள்ளார். அதேபோல் மற்ற நாடுகளுடனும் உறவை மேம்படுத்தவே விரும்புகிறோம். இந்த உலகமே ஒரு குடும்பம் போன்றது. பாகிஸ்தான், வங்க தேசம், பூடான், இலங்கை ஆகிய நாடுகள் எல்லாம் நம் குடும்பத்தின் ஒரு அங்கம்தான். அந்த நாடுகளுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ளவே இந்தியா நினைக்கிறது.

எல்லையில் 35 இடங்களில் இந்தோ - திபெத் எல்லைப் பாது காப்புப் படை நிலைகளை புதிதாக உருவாக மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. வீரர்களின் போக்குவரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விமான போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 123 மொபைல் போன் டவர்கள் உருவாக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பனிபடர்ந்த மலைமுகடுகளில் உள்ள வீரர்கள், தங்கள் குடும்பத்தினருடன் அடிக்கடி பேசிக்கொள்ள முடியும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x