

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக் கத்தில் சேர்ந்து பிறகு அதிலிருந்து விலகி நாடு திரும்பிய அரீப் மஜீத்தின் நடவடிக்கைகளை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.), தற்போது இணைய வழி ஆதாரங்களை திரட்டு வதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அணுகி இருக்கிறது.
பரஸ்பர சட்ட உதவி உடன் படிக்கை மூலமாக இணையம் சார்ந்த ஆதாரங்களை வழங்கக் கேட்டு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை அணுகி இருக்கிறது இந்தியா. இந்த தகவலை அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அரீப் மஜீத் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அவர் அளித்திருக்கும் வாக்குமூலங்களை மட்டுமே நம்பியிருக்காமல், இதர நாடுகளில் இருந்தும் சாட்சியங்கள் தேடப்படுகின்றன.
இந்த விஷயத்தில் அமெரிக்கா முதற்கட்டமாக அரீப் மஜீத் பயன்படுத்திய கணினியின் ஐ.பி. (இன்டர்நெட் புரோட்டோகால்) எண்ணை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மஜீத் பயன்படுத்திய பாஸ்போர்ட் குறித்து சில தகவல்களைப் பெற இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்குக் என்.ஐ.ஏ. கடிதம் எழுதியுள்ளது.
தீவிரவாத இயக்க நடவடிக்கைகளுக்காக மஜீத்துக்கு குவைத் நாட்டில் இருந்து நிதியுதவி கிடைத்துள்ளது. எனவே அதுதொடர்பாக விளக்கம் கேட்டு குவைத் நாட்டிற்கும் என்.ஐ.ஏ. கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தத் தகவல்கள் எல்லாம் விரைவில் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.