Published : 28 Jan 2015 06:35 PM
Last Updated : 28 Jan 2015 06:35 PM

சந்திரசேகர ராவுடன் பேசத் தயார்: ஆளுநரிடம் சந்திரபாபு நாயுடு உறுதி

ஆந்திரப்பிரதேச ஆளுநர் ஈ.எஸ்.என்.நரசிம்மனை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆளுநர் மாளிகையில் புதன் அன்று அழைத்துப் பேசினார். மூடிய அறையில் ஒருமணிநேரத்திற்கும் மேல் இப்பேச்சு நீடித்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவுடன் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகள் குறித்து கலந்துரையாட தான் தயாராக இருப்பதாகவும் அதேநேரம் கலந்துரையாடலின்போது ஆளுநர் அல்லது இரு மாநிலங்களுக்கும் பொதுவான அதிகாரிகள் அல்லது இந்திய அரசின் பிரதிநிதிகள் யாராவது இருக்க வேண்டும் என்றும் ஆந்திரா முதல்வர் ஆளுநரிடம் உறுதியளித்தார்.

திங்கள்அன்று (குடியரசுத் தினத்தில்) ராஜ் பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்ற மாநில முதல்வர்களிடம் ஆளுநர் இரு மாநிலங்களுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய விஷயங்களை நேரடியாகவோ அமைச்சர்களின் பிரதிநிதிகளைக்கொண்டோ பேசித் தீர்த்துக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

மாநில வளர்ச்சி குறித்தும் தலைநகரத்தை உலகத் தரம் வாய்ந்த நகரமாக கட்டமைப்பது குறித்த தனது திட்டங்களையும் சந்திரபாபு நாயுடு ஆளுநரிடம் எடுத்துரைத்தார். அப்போது, முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது தாவோஸ் பயணம் பற்றியும் அங்கு தொழிலதிபரகளையும் பல்வேறு உலக நிறுவனங்களின் முதன்மை நிர்வாகிகளையும் சந்தித்ததாகவும் ஆளுநரிடம் சுருக்கமாகத் தெரிவித்தார்.

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.

இரு மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்த EAMCET எனப்படும் முன்னாள் மருத்துவ மாணவர்களுக்கான வேலைவாய்ப்புத் தேர்வு கூட்டாக நடத்துவதில் மோதல் உருவானது. பின்னர் ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் இத் தேர்வுகளை தனித்தனியே நடத்தியது. இது தவிர, இரு மாநிலங்களும் மின்சாரம் மற்றும் தண்ணீர் பகிர்வுகள் குறித்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x