சுஜாதா சிங்கை நீக்கியது ஏன்?- மத்திய அரசுக்கு காங். கேள்வி

சுஜாதா சிங்கை நீக்கியது ஏன்?- மத்திய அரசுக்கு காங். கேள்வி
Updated on
1 min read

வெளியுறவுச் செயலராக இருந்த சுஜாதா சிங் நேற்றிரவு அதிரடியாக நீக்கப்பட்டார். அவரை அவசரமாக நீக்கியதன் பின்னணியை அரசு விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வெளியுறவுச் செயலராக இருந்த சுஜாதா சிங் நீக்கப்பட்டு, புதிய செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சுஜாதாவின் பதவிக்காலம் முடிய இன்னும் 8 மாத காலம் இருக்கும்போது அவரை அதிரடியாக நீக்கியுள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மனிஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், "வெளியுறவுச் செயலரை நீக்கியதற்கு, முன்னாள் அமெரிக்க துணைநிலை தூதர் தேவயானி கோப்ரகடே விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதத்திற்கான எதிர்ப்பை பதிவு செய்யும் விளைவா? அமெரிக்க அதிபர் வந்துசென்ற பின்னர் சுஜாதா நீக்கப்பட்டதற்கு வேறு காரணம் இருக்கிறதா... இல்லை யதார்த்தமாக நடந்ததா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

விசா முறைகேடு வழக்கில் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டபோது, சுஜாதா சிங் தான் வெளியுறவு செயலராக இருந்தார்.

தேவையானி கைது நடவடிக்கையை தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சில சலுகைகளை ரத்து செய்தது உட்பட பல கெடுபிடிகளை சுஜாதா சிங் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்திய - அமெரிக்க உறவில் பெருமளவில் பின்னடைவு ஏற்பட்டது.

இத்தகைய சூழலில் பதவிக் காலம் முடியும் முன்னரே சுஜாதா சிங் நீக்கப்பட்டு, ஜெய்சங்கர் வெளியுறவுச் செயலர் பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தை திட்டமிட்டு செயல்படுத்துவதில் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in