அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்து

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்து
Updated on
1 min read

குடியரசுத் தின விழாவில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 27-ம் தேதியன்று ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு செல்வதாக இருந்தது.

ஆனால் அவரது ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஒபாமா 27-ம் தேதியன்று டெல்லியில் இருந்து சவுதி அரேபியா செல்கிறார். இதன் காரணமாக அவரது ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆக்ரா பயணம் ரத்தானது குறித்து உ.பி. மாநில அரசுக்கு அமெரிக்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்புக் குழுவினரும் ஆக்ராவிலிருந்து வெளியேறியிருக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 27-ம் தேதி ஆக்ராவுக்கு செல்வதாக இருந்தது. இதனையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாஜ்மகால் உட்பட வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட காலை 9.00 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டுவந்தது. தாஜ்மகாலில் தீவிர பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒபாமா ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு உ.பி. மாநில அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "நடைமுறை சிக்கல்களைக் கருதி அமெரிக்க அதிபர் ஆக்ரா வருகை ரத்து செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.

மேலும் 'தி இந்து' ஆங்கிலப் பத்திரிகைக்கு பெயர் குறிப்பிட விரும்பாதா ஆக்ராவைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், "அமெரிக்க பாதுகாப்பு குழுவுக்கும் - இந்திய பாதுகாப்பு குழுவுக்கும் இடையே சற்று கருத்து வேறுபாடு இருந்தது" என்றார்.

தாக்குதல் சதி:

ஒபாமா வருகையை ஒட்டி, ஜனவரி 28-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஆதரவு ஜிகாதி அமைப்புகள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஜமாத்-உத்-தாவா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய அமைப்புகள் சதித் திட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

தீவிரவாத குழுவினர் ஒரு பிரிவினர் மகாராஷ்டிராவிலும், மற்றொரு பிரிவு உத்தரப்பிரதேசத்திலும், ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் சிலரும் பதுங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் மும்பை சித்தி விநாயகர் கோயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in