

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூன்று நாள் இந்தியப் பயணத்தின்போது அணு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன.
வரும் 25ம் தேதி ஒபாமா தன் மனைவி மிஷெல் ஒபாமாவுடன் இந்தியா வருகிறார். அவருடன் பல மூத்த அதிகாரிகளும் வருகின்றனர்.
முதல் நாளான 25ம் தேதி, இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒபாமா கலந்துரையாடுகிறார். அப்போது அணு ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட இருக்கின்றன.
அதன் பிறகு இரண்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்து ஊடகங்களைச் சந்திக்க உள்ளார்கள். பின்னர், குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் கலந்துகொள்கிறார்.
இரண்டாவது நாளில், குடியரசு அணிவகுப்பில் ஒபாமா கலந்துகொள்கிறார். பின்னர் அவரும் மோடியும் இந்தோ அமெரிக்க நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
தனது பயணத்தின்போது ஏதேனும் ஒரு நாளில் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் உரையாற்றவும் இருக்கிறார்.
பயணத்தின் இறுதி நாளில், ஆக்ராவுக்குச் சென்று தாஜ்மகாலைப் பார்த்துவிட்டு ஒபாமா அமெரிக்கா திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.