

ஆந்திர மாநிலம் விஜயவாடா சாந்திநகரை சேர்ந்தவர் துர்கா பவானி (21). இவர் பட்டப் படிப்பை பாதியில் கைவிட்டவர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்னர் இப்ராஹிம் பட்டினம் பகுதியைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரி கிருஷ்ணம் ராஜுவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
வேலை கிடைக்காத காரணத் தால், தனது காதலி துர்கா பவானியை திருட்டு தொழிலில் இறக்கினார் கிருஷ்ணம் ராஜு. இதற்கு ஒப்புக்கொண்ட துர்கா பவானியும் கூட்ட நெரிசல் உள்ள பஸ்களில் ஏறி பெண்களிடம் நகை, கைப்பை போன்றவற்றை திருடிக் கொண்டுவந்து தனது காதலனிடம் கொடுப்பார்.
பின்னர் அந்தத் திருட்டு நகை களை அடகுக் கடைகளில் விற்று அதை இருவரும் சரிபாதியாக பங்கு போட்டுக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இதுவரை துர்கா பவானி 16 திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட 7 பேர் விஜயவாடா குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து குற்றவாளிகளைப் பிடிக்க வியூகம் வகுத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எஸ்.ஐ. கிருஷ்ண குமார் தலைமையில் போலீஸார் கவர்னர்பேட்டை பகுதியில் ஒரு சினிமா தியேட்டர் முன் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திருடிய நகைகளை அடகு வைக்க அந்த வழியாக கிருஷ்ணம் ராஜு சென்றார்.
அவரைக் கண்டு சந்தேக மடைந்த போலீஸார் கிருஷ்ணம் ராஜுவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது நடந்த விஷயங்களை கிருஷ்ணம் ராஜு போலீஸாரிடம் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸார் துர்கா பவானியையும் கைது செய்து இவர்கள் திருடிய ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பறிமுதல் செய்தனர்.