Published : 26 Jan 2015 11:51 AM
Last Updated : 26 Jan 2015 11:51 AM

அணுசக்தி ஒப்பந்தம் கடந்து வந்த பாதை…

கடந்த 2005 முதல் இதோ வருகிறது, அதோ வருகிறது என்று கூறப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான தடைகள் நீங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

அதன்படி சுமார் 9 ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக நீடிக்கும் இந்த ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. இந்தநேரத்தில் அணுசக்தி ஒப்பந்தம் கடந்து வந்த பாதையை பின்னோக்கி திரும்பிப் பார்ப்பது அவசியமாகிறது.

இந்திய அணுசக்தி திட்ட வரலாறு

1950-களில் இந்திய அணுமின் நிலைய திட்டங்களுக்கு அமெரிக்கா உதவியது. 1968-ல் அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட அமெரிக்கா வலியுறுத்தியபோது இந்தியா மறுத்ததால் இருநாடுகளிடையே விரிசல் ஏற்பட்டது. 1974-ம் ஆண்டில் ‘சிரிக்கும் புத்தர்’ என்ற முதல் அணுகுண்டு சோதனையை இந்தியா நடத்தியது.

அதன்பின் இந்தியாவுடனான அணு உறவை அமெரிக்கா முற்றிலுமாக துண்டித்துக் கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் அணுசக்தி துறையில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டது. எனினும் சோவியத் யூனியன், பிரான்ஸ், சுவீடன் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டின.

2000-ம் ஆண்டில் இந்திய, அமெரிக்க உறவு மீண்டும் துளிர்விட்டது. இதன் தொடர்ச்சியாக 2005 ஜூலை 18-ம் தேதி இந்தியா-அமெரிக்கா இடையே மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஆனால் அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவுக்கு பாதகமாக உள்ளதாக பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்தக் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ‘அணு விபத்து இழப்பீட்டு சட்டத்தை’ மத்திய அரசு இயற்றியது. அணு உலைகளில் ஏதேனும் விபத்து நேரிட்டால், அது தொடர்பான இழப்பீட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பு என்று இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டது.

அதன்படி விபத்துக்கான இழப்பீட்டை இந்தியாவில் அணுஉலைகளை அமைக்கும் அமெரிக்க நிறுவனங்களே அளிக்க வேண்டும். இதனை அமெரிக்கா ஏற்கவில்லை. சர்வதேச நடைமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தியது. அதன்படி அணு உலைகளில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அவற்றை இயக்கும் நிறுவனமே இழப்பீடு அளிக்க வேண்டும்.

நமது நாட்டில் உள்ள அணு உலைகள் அனைத்தும் மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய அணு சக்தி நிறுவனத்தால் (என்பிசிஐஎல்) இயக்கப்படுகின்றன. சர்வதேச நடைமுறையை ஏற்றுக் கொண்டால் அணு விபத்துகளின்போது மத்திய அரசே இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்ய இந்தியாவுக்கு அனுமதி அளிப்பதிலும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. யுரேனியத்தை இந்தியா மறுசுழற்சி செய்து அணுகுண்டுகளை தயாரிக்கக்கூடும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்தது.

இந்த விவகாரங்களால் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன.

அணுகுண்டும் வேண்டும், அணுமின்சாரமும் வேண்டும்

இந்தியாவின் மின்சார தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதை ஈடுகட்ட அணு மின் உற்பத்தியை பெருக்குவது அத்தியாவசியமாகி உள்ளது. ஆனால் அணு மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியம் நம்மிடம் இல்லை. அதற்கு வெளிநாடுகளையே சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுவதால் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாமல் யுரேனியத்தை பெற முடியுமா என்ற கேள்வியை பலர் எழுப்புகின்றனர்.

அதற்கு இந்தியா சில துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும். இனிமேல் அணுகுண்டே தயாரிக்கப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்து, இருப்பில் உள்ள அணுகுண்டுகளை எல்லாம் அழித்து, சர்வதேச அணுசக்தி முகமையுடன் (ஐ.ஏ.இ.ஏ.) நேரடியாக ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். ஜப்பான், தென் கொரியா ஆகியவை இம்மாதிரியான நேரடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால் அணுசக்தி விநியோகக் குழுவில் (என்.எஸ்.ஜி.) உறுப்பினராக இருக்கும் நாடுகளுடன் நேரடியாக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம். அவர்களிடம் இருந்து யுரேனியத்தை வாங்கிஅணு மின்சாரத்தைத் தயாரிக்கலாம். இந்தியாவை பொறுத்தவரை அணுகுண்டும் வேண்டும், அணு மின்சாரமும் வேண்டும். அதனால்தான் உலக வல்லரசான அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லண்டனில் சமரச பேச்சு

இந்த ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்திய, அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினர் அண்மையில் லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல்வேறு விவகாரங்களில் சுமுக முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்தே அதிபர் பராக் ஒபாமாவும் பிரதமர் நரேந்திர மோடியும் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தபோது, அணுசக்தி ஒப்பந்தத்துக்கான தடைகள் நீங்கியிருப்பதாகவும் அந்த ஒப்பந்தம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x