Published : 04 Apr 2014 11:57 AM
Last Updated : 04 Apr 2014 11:57 AM

மதவாத அரசியலில் ஈடுபடும் சோனியா காந்தி: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

மதவாத அரசியலை சோனியா காந்தி கையில் எடுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் ஈடுபட்ட அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.

காஜியாபாத், குருசேத்திரா, குர்கான் ஆகிய பகுதிகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: “தோல்வி அடைந்துவிடுவோம் என்ற உணர்வு காங்கிரஸ் கட்சியினருக்கு வந்துவிட்டது. அதனால், மதச்சார்பின்மை என்ற கோஷத்திலிருந்து, மதவாதம் என்ற நிலைக்கு அக்கட்சி மாறிவிட்டது.

சோனியா காந்தி, முஸ்லிம் வாக்குகள் சிதறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தில்லி ஜும்மா மசூதி ஷாகி இமாம் சயீத் அகமது புகாரியிடம் கூறியது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.

ஷாகி இமாமிடம் சோனியா கூறிய விஷயங்கள் தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி 24 மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னமும் இந்த விவகாரத்தில் தானாகவே முன்வந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

இந்த நாட்டை தவறாக வழிநடத்தியதுடன், தேசத்தைப் பிரித்தாளும் நடவடிக்கையிலும் சோனியா ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி, மதச்சார்பின்மை என்ற பெயரில் மதத்திற்குத்தான் முக்கியத்துவம் தருகிறது. நாங்கள் (பாஜக) இந்திய நலனுக்கே முக்கியத்துவம் தருகிறோம்.

எங்கள் கட்சியைப் பொறுத்த வரை மதச்சார்பின்மை என்பது அனைவரையும் ஒன்றுபடுத்துவது, வளர்ச்சியில் பங்கேற்க வைப்பது ஆகியவைதான். காங்கிரஸை பொறுத்தவரை மக்களை பிரித்தாளு வதைத்தான் மதச்சார்பின்மை எனக் கருதுகிறது. தேர்தலின்போது மட்டுமே மதச்சார்பின்மை கோஷத்தை காங்கிரஸ் முன்வைக் கிறது. அனைத்து சமூகத்தினரும் எங்கள் சமூகத்தினரே என்ற கொள்கை உடையவர்கள் நாங்கள். மதச்சார்பின்மையை வைத்து காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை நடத்துகிறது. வளர்ச்சி என்பதே எங்களின் தேசிய செயல்திட்டம்.

தனது தவறான செயல்பாடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கூடிய அரசு, மத்தியில் அமைந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் கருதுகிறது. அவர்களின் தவறுகளையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும் என்றால் வலிமையான அரசு அமைய வேண்டும். எங்களுக்கு 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களை தாருங்கள்.

நாட்டின் வளத்தைக் காக்க அனைவரும் காவலாளிகளாகச் செயல்பட வேண்டும் என்று இளவரசர் (காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி) கூறியுள்ளார். மக்களின் நிலத்தைப் பாதுகாக்கும் பணியில், அவரின் சகோதரி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும் ஈடுபடுவாரா? என்று கேள்வி எழுப்பினார்.

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற நில பேர வர்த்தகத்தில் ராபர்ட் வதேரா முறைகேடு செய்துள்ளார் என சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. அதை ராபர்ட் மறுத்திருந்தார். இந்த விவகாரத்தை குறிப்பிட்டே மோடி இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x