

எந்தெந்த நகரங்களை திறன்மிகு நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டி) உருவாக்குவது என்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
திறன்மிகு நகரங்கள் மற்றும் டெல்லி-மும்பை காரிடார் திட்டங்கள் சார்ந்து தீவிரமாகச் செயலாற்றி வருகிறோம். மாநில அரசுகளின் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இக்கூட்டத்துக்குப் பிறகு இத்திட்டங்கள் குறித்த இறுதி முடிவு இம்மாத இறுதிக்குள் எடுக்கப்படும். அதற்குப் பிறகு நாடாளுமன்றம் சென்று திறன்மிகு நகரங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
திறன்மிகு நகரங்களை உருவாக்க பல லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும். அவ்வளவு தொகையை அரசாங்கத்தால் முதலீடு செய்ய முடியாது. ஆகவே, தனியார்-பொது கூட்டுமுயற்சியில் மட்டுமே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மாநில அரசுகளுடன் ஆலோ சனை நடத்திய பிறகே, எந்தெந்த நகரங்களைத் திறன்மிகு நகரங்களாக உருவாக்குவது என முடிவு செய்யப்படும். ஏனெனில், இத்திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்பாக மத்திய, மாநில, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு இதுகுறித்த நம்பிக்கையை உருவாக்குவது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அனைத்து மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு திறன்மிகு நகரம் குறித்த பயிலரங்குகள் நடத்தும்படி மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.