Published : 22 Jan 2015 10:26 AM
Last Updated : 22 Jan 2015 10:26 AM

பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மத்திய மருத்துவ நிபுணர் குழுவை அனுப்புங்கள்: பிரதமருக்கு தெலங்கானா முதல்வர் வேண்டுகோள்

பன்றிக் காய்ச்சல் நோயை முழு வதுமாக கட்டுப்படுத்த மத்திய மருத்துவ நிபுணர் குழுவை ஹைதராபாத்துக்கு அனுப்ப வேண் டும் என்று பிரதமர் மோடிக்கு தெலங் கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 554 பேருக்கு இந்த நோயின் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 173 பேருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் மட்டும் தினமும் 50-க்கும் மேற் பட்டோர் இந்நோயின் அறிகுறியால் அரசு, தனியார் மருத்துவ மனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 3 மாதங்களில் மட்டும் தெலங்கானாவில் 9 பேரும் கடந்த ஓராண்டில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்போது தெலங்கானாவின் ஹைதராபாத், மகபூப் நகர், மேதக், கரீம் நகர் மற்றும் ஆந்திராவின் சித்தூர், ஓங்கோல், மேற்கு கோதாவரி ஆகிய மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் இந்த நோய் அறிகுறி காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் பரவும் அபாயம்

சித்தூர் மாவட்டம், தமிழக, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால், இந்நோய் இந்த இரு மாநிலங்களிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தலைமையில் அமைச்சர்கள், மருத்துவத் துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.

இதில் பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் காய்ச்சல் வேகமாக பரவ, மருத்துவத் துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம் என தெலங்கானா முதல்வர் குற்றம் சாட்டினார். பின்னர் இதனை போர்க்கால அடிப்படையில் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் கே. சந்திரசேகர ராவ், மத்திய சிறப்பு மருத்துவ குழுவினரை உடனடியாக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதற்கு பிரதமரும் ஒப்புதல் அளித்தார்.

பின்னர் பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்த முதல்வர் சந்திரசேகர ராவ், அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

நேற்று மாலை தெலங்கானா அமைச்சரவையின் அவரச கூட்டம் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் கூடி பன்றிக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து விவாதித்தது.

இதில், பொது மக்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.

மேலும், தெலங்கானா மாநில மருத்துவ துறை முதன்மைசெயலாளர் சுரேஷ் சந்தா நேற்று காலை டெல்லிக்கு விரைந்தார். இவர் தெலங்கானாவில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் பிரதமரிடம் விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x